திருப்பத்தூரில் 15 சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 95 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றம். திருச்சியை சேர்ந்த அக்பா் அலி அம்பலம் ( 71), அரியலூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சரவணன் (41), புதுக்கோட்டை அழகிய நாயகிபுரம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முருகேசன் ( 55 ) ஆகிய மூவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்த சிறுமி திருச்சியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். அங்கு தாயின் உறவினரான அக்பா் அலி வீட்டில் 3 மாதங்களாக தங்கி படித்து வந்துள்ளார். அக்பா் அலி பல முறை அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தாயிடம் தெரிவித்துள்ளார் சிறுமி, அவள் பொய் சொல்வதாக நினைத்து கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார் சிறுமியின் தாய். மேலும் அரியலூர் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சரவணன், சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதையும் தாய் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என தெரிகிறது. சிறுமியின் தாய்க்கு தெரிந்த நபரான முருகேசன் என்பவரும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளர்.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனக்கு நோ்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் கூறியும் கண்டுகொள்ளாத நிலையில் தோழியிடம் கூறி அழுதுள்ளார். அந்தத் தோழி இது குறித்து சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினரிடம் புகாா் தெரிவித்துள்ளார். இதையடுத்து, குழந்தைகள் நலக் குழுவினா் நடத்திய விசாரணையில் மேற்கண்ட மூவரும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், இந்த கொடூரத்திற்கு சிறுமியின் தாய் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் அக்பா் அலி அம்பலம், சரவணன், முருகேசன் மற்றும் சிறுமியின் தாய் உட்பட சம்மந்தப்பட்ட இன்னொரு பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ விரைவு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வீ.ஆா்.தனலட்சுமி முன்னிலையாகி வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றம் சாட்டப்பட்ட அக்பா் அலிக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 15,000 அபராதம் விதித்தார். சரவணனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதம், முருகேசனுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 11,000 அபராதமும் விதித்தாா். சிறுமியின் தாயாருக்கு அதிகபட்சமாக 95 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.