அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில், இரண்டு 15 வயது சிறுமிகளை வெவ்வேறு காலகட்டங்களில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த 23 வயதான ஹென்றி பியூஸ்டன் குட்டாமா மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட வழக்கறிஞர் வெளியிட்ட தகவலின்படி, குட்டாமா அமெரிக்க ஈஸ்ட் ஹாம்ப்டன் தபால் நிலையத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
விசாரணையில் தெரியவந்ததாவது, கடந்த மே 11ஆம் தேதி பள்ளியிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 15 வயது சிறுமியை தனது தபால் வாகனத்தில் கடந்து சென்ற குட்டாமா, அவளுக்கு உணவு வாங்கித் தருவதாகக் கூறி வாகனத்தில் ஏற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஹோட்டலுக்கு செல்லாமல் வாகனத்தை மக்கள் நடமாட்டம் குறைந்த முட்டுச்சந்து பகுதிக்கு ஓட்டிச் சென்று நிறுத்தியதாகவும், அங்கிருந்து சிறுமி வெளியேற முடியாதபடி தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன்பின், சிறுமியின் மணிக்கட்டுகளைப் பிடித்து தபால் வாகனத்தின் பின்புறத்திற்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு சிறுமி பள்ளிக்குத் திரும்பிச் சென்று ஆசிரியர்களிடம் நடந்ததை தெரிவித்துள்ளார், அதைத்தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் மே 15ஆம் தேதி நகர காவல்துறையினர் குட்டாமாவை கைது செய்தனர். இதற்கிடையில், அவரது கைது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து தற்போது 19 வயதாக இருக்கும் மற்றொரு இளம் பெண் காவல்துறையை அணுகினார். அவர் அளித்த வாக்குமூலத்தில், தனக்கு 15 வயதாக இருந்தபோது குடும்ப நண்பரான குட்டாமா தனது காருக்குள் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து, இரண்டு சிறுமிகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில் குட்டாமா மீது முதல் நிலை பாலியல் வன்கொடுமை, முதல் நிலை பாலியல் துஷ்பிரயோகம், மூன்றாம் நிலை பாலியல் வன்கொடுமை, பாலியல் முறைகேடு மற்றும் குழந்தைகளின் நலனுக்கு ஆபத்து விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஜூன் 10ஆம் தேதி நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், வழக்கு முடியும் வரை 1.5 மில்லியன் டாலர் பகுதி பிணை அல்லது அதற்குச் சமமான நிபந்தனைகளின் கீழ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூலை 17ஆம் தேதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். முக்கிய குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.