மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், 17 வயது சிறுமி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், சடலமானது அவரது உறவினர் வீட்டருகே ஞாயிற்றுக்கிழமை (அக் 25) காலை மீட்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
கெய்காட்டா காவல் நிலையம் இவ்விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளதோடு, அந்தக் கொடூரக் குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் அவரது உறவினர் ஒருவரையும் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சடலம் மீட்கப்பட்ட நிலையை வைத்துக் கொண்டு, இது ஒரு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்காக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் மற்றும் அவர் இதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா? இல்லையா? என்பது குறித்த தகவல்கள் அனைத்தும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உறுதி செய்ய முடியும் என்று மாவட்ட காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனையடுத்து, பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு, அந்தப் பெண் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன், தன் வீட்டருகே நள்ளிரவு வரை நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக கூறி வெளியே சென்றதாகத் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், நள்ளிரவு சமயத்தில் சிறுமிக்கு கைபேசியில் அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து அவர் அந்த இடத்தை விட்டுச் சென்றதாகவும், அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நிகழ்ச்சி முடிந்த பிறகு, அவரது குடும்பத்தினர் சிறுமியை தேடத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
இறுதியாக, ஞாயிற்றுக்கிழமை காலையில், அவரது உறவினரின் இல்லத்தின் பின்புறத்திலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
"நேற்று இங்கு ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக நாங்கள் இரவு 8 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டோம். நாங்கள் அவளைத் தெருவில் சந்தித்தோம். அவளும் தன் தோழியுடன் அதே இசை நிகழ்ச்சிக்குச் செல்வதாகக் கூறினாள். அதனால், நாங்கள் புறப்பட்டோம். நிகழ்ச்சி முடிந்ததும், நாங்கள் வீட்டிற்குத் திரும்பினோம். பிறகு, அவள் இன்னும் வீடு திரும்பவில்லை என்று கேள்விப்பட்டேன். நான் அவளுக்குத் தொலைபேசியில் அழைத்தேன். ஆனால், அழைப்பு காத்திருப்பில் இருந்தது. அது இணைய இணைப்புப் பிரச்சனை என்று நினைத்து நாங்கள் உறங்கிவிட்டோம். பின்னர் காலையில், இந்தச் சம்பவம் பற்றி நான் கேள்விப்பட்டேன்," என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்வழி அத்தை தனக்கு தெரிந்த தகவலை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
காவல் துறையினர் தரப்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட உறவினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரிகள் குற்றத்திற்கான நோக்கத்தைக் கண்டறிய முயன்று வருகின்றனர். "ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இருப்பினும், தற்போதைக்கு காவல்துறையால் இதைத் தவிர வேறு எதையும் கூற முடியாது. அதுமட்டுமின்றி, இது ஒரு எல்லைப் பகுதி என்பதால், வேறு ஏதேனும் குற்றவாளிகள் பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்றுள்ளனரா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது," என்று உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர் இந்த சமத்துவம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
கைகாட்டா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுப்ரதா தாக்கூர், சம்பவ இடத்திற்கு வந்து, தானும், தனது கட்சியும், நிர்வாகமும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் துணை நிற்பதாக நம்பிக்கை கூறியுள்ளார்.
இந்தக் கொடூரச் செயலைச் செய்தவர் அல்லது செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் ஒரு சட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்