உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், போலீஸ் என்கவுன்டரில் தேடப்படும் கொடூர குற்றவாளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பானு பிரதாப் சிங் (38) என்பவன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவனைப் பிடித்துத் தருபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று ஆசம்கர் காவல் துறை அறிவித்திருந்தது. கோரக்பூர் காவல் துறை சார்பில் இவன் மீது 15,000 ரூபாய் பரிசுத்தொகை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக போலீஸாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த இவனைப் பிடிக்க சிறப்பு அதிரடிப் படை (STF) தீவிரத் தேடுதலில் ஈடுபட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு அயோத்தி பகுதியில் குற்றவாளி பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து, பிரயாக்ராஜ் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர். போலீஸாரைக் கண்டதும் பானு பிரதாப் சிங், தப்பிக்க முயற்சித்ததுடன் போலீஸாரை நோக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. போலீஸார் தற்காப்புக்காகப் பதிலடி கொடுக்க, இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் பானு பிரதாப் சிங் பலத்த காயமடைந்து கீழே சரிந்தான்.
உடனே அவனை மீட்டு அயோத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் வரும் வழியிலேயே அவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கோரக்பூரைச் சேர்ந்த பானு பிரதாப் சிங், நீண்ட நாட்களாகக் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவன். ஒப்பந்தக் கொலைகள், கொள்ளை, ஆயுதச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவன் மீது தொடர்ச்சியாகப் புகார்கள் பதிவாகியிருந்தன. இவன் அடிக்கடி தனது இருப்பிடங்களை மாற்றிக்கொண்டும், பல மாவட்டங்களில் உள்ள குற்றக்கும்பல்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த ஒரு கொடூர குற்றவாளி என்கவுன்டர் செய்யப்பட்டது, அந்தப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.