அகமதாபாத்தில், சடங்குகள் மூலம் குணப்படுத்துவதாகக் கூறி 15 வயது சிறுமியை அவரது வீட்டில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 45 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சோலா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாண்ட்லோடியாவைச் சேர்ந்த அந்தச் சிறுமி நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது பெற்றோர் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் மந்திரவாதியான சந்தேஷ் பஞ்சலை அணுகியுள்ளனர். அப்போது, சிறுமிக்கு பேய் பிடித்திருப்பதாகவும், அவரை குணப்படுத்த சில சடங்குகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் பஞ்சல் குடும்பத்தினரிடம் தெரிவித்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பரில் அந்தக் குடும்பத்தினர் பஞ்சலை தங்கள் வீட்டிற்கு அழைத்துள்ளனர். முதல் முறையாக வீட்டிற்கு வந்தபோது, "சிறுமியுடன் தனியாக சில சடங்குகள் செய்யவேண்டும், அதனால் அனைவரும் வெளியே செல்லுங்கள்" என்று குடும்பத்தினரிடம் பஞ்சல் கூறியதாகவும், பின்னர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன் பின்னரும் அவர் தொடர்ந்து அந்த வீட்டிற்கு வந்து, சிகிச்சை அளிப்பதாகக் கூறி சிறுமியை மீண்டும் மீண்டும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களால் கடுமையான மன அதிர்ச்சிக்கு ஆளான சிறுமி, சமீபத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை சோலா காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சந்தேஷ் பஞ்சலை கைது செய்துள்ளனர். சோலா காவல் நிலைய ஆய்வாளர் கே.என். பூகன், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை உறுதி செய்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்