திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த சிவதண்டலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த மாதம் 17ஆம் தேதி வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் சிறுமியை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில் கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.
இந்நிலையில் 19 நாட்களுக்கு பிறகு அந்த சிறுமி பொன்னேரி அடுத்த மெதூர் பகுதியில் உள்ள அரிசி ஆலையில் இருப்பதாக கண்டுபிடித்து, சிறுமியின் உறவினர்கள் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கடம்பத்தூர் போலீசார் சிறுமியை மீட்க அரிசி ஆலைக்கு சென்று பார்த்தபோது அந்த சிறுமி 55 வயதுடைய சித்தப்பா முறையிலான உறவினர் சங்கர் என்பவருடன் திருமணமாகி, அந்த ஆலையில் பணியாற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். பின்னர் சங்கரை கடம்பத்தூர் காவல் நிலையத்தில் அழைத்து வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த நபர் சிறுமிக்கு சித்தப்பா முறையான 55 வயதான சங்கர் என்பதும் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி பேரப்பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் வீட்டில் தங்கி இருந்து வந்துள்ளார். அப்போது சிறுமிக்கும் அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது, நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. சிறுமியின் வீட்டில் உள்ள பெற்றோர்கள் தினமும் வேலைக்கு சென்று விடுவதால், வீட்டில் சித்தப்பா முறையிலான சங்கரை மகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர். வீட்டில் பெற்றோர்கள் இல்லாததை பயன்படுத்தி கொண்ட முதியவர் சங்கர் சிறுமிக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் ஒரு முறை வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதை சிறுமியின் உறவினர் பார்த்ததால் அந்த பெண்ணின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சங்கரை தாக்கி வீட்டை விட்டு துரத்தி உள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டை நோட்டமிட்டு இருந்த சங்கர், அதிகாலை தூக்க கலக்கத்தில் இருந்த சிறுமியை வீட்டிலிருந்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் பொன்னேரி அடுத்த மெதூர் பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு, அங்குள்ள அரிசி ஆலையில் தங்கி பணியாற்றி வந்துள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து கடம்பத்தூர் போலீசார் சங்கரை திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி திருமணம் செய்த வழக்கில் திருவள்ளுர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.