ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காஞ்சிகோவில் பகுதியில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட 65 வயது பெண், கள்ளத்தொடர்பு காரணமாக கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கட்டுமானத் தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிகோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசைப்பட்டி வெள்ளப்பாறை பகுதியில் கடந்த 21-ஆம் தேதி 60 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது. இதுகுறித்து நில உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பல நாட்களாக உயிரிழந்திருந்ததால் உடல் சிதைந்த நிலையில் இருந்தது. இதனால் உயிரிழந்தவர் யார் என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், உயிரிழந்தவர் ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் வீதியைச் சேர்ந்த 65 வயதான வளர்மதி என்பது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவருடன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி விஜயகுமார் என்பவரே கொலையாளி என்பது உறுதியானது.
விசாரணையில், சுமார் 15 நாட்களுக்கு முன்பு இருவரும் காஞ்சிகோவில் பகுதியில் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டபோது அவர்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரியவந்தது. சம்பவத்தன்று விஜயகுமார் மதுபானம் வாங்கிக்கொண்டு வளர்மதியை தனியாக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அதிகளவில் மது அருந்தியிருந்ததால் அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், "நீ எல்லாம் ஒரு ஆம்பளையா?" என்று வளர்மதி அவமதித்து பேசியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அதேநேரத்தில், வீட்டிற்கு சிலிண்டர் வாங்குவதற்காக விஜயகுமாரிடம் வளர்மதி ரூ.5,000 கடன் வாங்கியிருந்ததாகவும், அந்த பணத்தை திருப்பிக் கேட்டதாலும் தகராறு தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த விஜயகுமார், தன்னிடம் இருந்த கத்தியால் வளர்மதியின் கழுத்தை சரமாரியாக அறுத்து படுகொலை செய்துவிட்டு, அவரது உடலை அங்கேயே வீசிவிட்டு தப்பியோடியுள்ளார். பின்னர், உயிரிழந்த பெண் அணிந்திருந்த காதுத் தோட்டை பறித்து சென்று அடமானம் வைத்து ரூ.22 ஆயிரம் பெற்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து விஜயகுமாரை கைது செய்த காஞ்சிகோவில் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.