க்ரைம்

“அம்மா எதுவும் கேட்கல” - 6ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை! தாயின் காதலன் POCSO-வில் கைது

தனது தாயிடம் பலமுறை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது...

Muthu Lakshmi

சென்னை தாம்பரம் அருகே 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் தாயின் காதலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறுமி பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாத தாயிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், தனது கணவரை விவாகரத்து செய்த பின்னர் புதுவஞ்சேரியைச் சேர்ந்த மோகன்ராஜ் (29) என்பவருடன் சேர்ந்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் 6-ம் வகுப்பு படிக்கும் மகளும் அவர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், மோகன்ராஜ் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, நடந்த சம்பவங்களை தனது தாயிடம் பலமுறை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், தாய் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் புறக்கணித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் யாரும் தனது குறைகளை கேட்கவில்லை என்ற வேதனையில் இருந்த சிறுமி, இறுதியாக பள்ளியில் தனது ஆசிரியரிடம் நடந்த சம்பவங்களை கண்ணீருடன் கூறியுள்ளார். மேலும், தாயிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் வாக்குமூலத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர், உடனடியாக சிட்லப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மோகன்ராஜை போலீசார் கைது செய்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், சிறுமி பலமுறை கூறிய புகார்களை ஏன் கவனிக்கவில்லை, குழந்தையின் பாதுகாப்பில் அலட்சியம் ஏற்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தாயிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் தங்களுக்கு நேரும் துன்பங்களை வெளிப்படையாக பகிரும்போது, பெற்றோர்களும் பாதுகாவலர்களும் அதனை உடனடியாக கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது. தற்போது இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்