க்ரைம்

“மூன்றாவது மாடியில் இருந்து வீசப்பட்ட 7 வயது சிறுமி” - கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அடுத்தடுத்து நடந்த கொடூரம்!

இரண்டு சந்தேக நபர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர்..

Muthu Lakshmi

காசியாபாத்தில் கட்டுமானத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் அடித்தளத்தில் ஜூலை 11 சனிக்கிழமை, இன்று காலை ஏழு வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம், உள்ளூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனையில், அந்த சிறுமி இறப்பதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவர் உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை நேரத்தில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

நந்தகிராம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜ் நகர் விரிவாக்கப் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, தலையில் பலத்த காயம் மற்றும் பல்வேறு எலும்பு முறிவுகளுடன் அந்தச் சிறுமியின் உடல் கண்டெடுக்கபட்டதாகவும் கட்டிடத்தின் அடித்தளத்தில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். கட்டுமானத்தில் உள்ள அந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து அவர் தூக்கி எறியப்பட்ட இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. இருப்பினும், சம்பவங்களின் சரியான வரிசை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் இது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காசியாபாத் போலீசார் இந்த குற்ற செயலில் சந்தேகத்தின் பேரில் நான்கு முதல் ஐந்து நபர்களைக் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலியல் வன்கொடுமை, கொலை, போக்சோ சட்டம் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்டவர்களில், இரண்டு சந்தேக நபர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர். இந்தச் சம்பவத்தில் யார் யார் ஈடுபட்டனர்? என்பதைத் துல்லியமாக கண்டறிய, காவல்துறையினர் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை மாலை முதல் சிறுமி காணாமல் போனதாகவும், குடும்பத்தினர் அவளைத் தேடி வருவதாகவும் சிறுமியின் தாய்மாமன் கூறினார். பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் அதே கட்டுமான இடத்தில் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிந்து, அந்த வளாகத்திலேயே அமைக்கப்பட்ட ஒரு தற்காலிகக் கூடாரத்தில் வசித்து வருகின்றனர். குழந்தையின் மரணச் செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்களில் சிலர், சம்பவ இடத்தில் பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரைத் தாக்க முயன்றனர். சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்காகக் கூடுதல் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தகவல் அறிந்து நந்தகிராம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவல் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது. மூத்த அதிகாரிகளும் விசாரணையை மேற்பார்வையிட சம்பவ நிகழ்விடத்தைப் பார்வையிட்டனர். தடயவியல் ஆய்வக குழு ஒன்று சம்பவ இடத்தை ஆய்வு செய்து தடயவியல் சான்றுகளை சேகரித்துள்ளனர். வழக்கின் முழுமையான சூழ்நிலைகளை அறிந்துகொள்வதற்காக, காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளையும் தடயவியல் ஆதாரங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதால், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.