இந்தியா முழுக்க பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.மேலும் சில பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகள் தப்பிக்கும் சூழலே உள்ளது. ஆனால் சில வழக்குகளில் குற்றவாளிகளுக்கு கொடும் தண்டனை விதிக்கப்படுகிறது. அப்படி நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கில் தான் முக்கியமான தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 -ஆம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து 5 வயது தங்கையை அடித்தே கொன்ற அணில் என்ற நபருக்கு தூக்கு தண்டனை வழங்கி உத்திர பிரதேச மாநில சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியில் வசித்த 7 வயது சிறுமி மற்றும் அவரது 5 வயது சகோதரி ஆகிய இருவரும் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்றில் படித்து வந்தனர்.
சகோதரிகள் இருவரும் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் அவர்களை தடுத்த தேன் வியாபாரியான அணில்(32) என்ற நபர் அவர்களுக்கு பிஸ்கட் மற்றும் தேன் தருவதாக கூறி ஏமாற்றி அவர்களை கிராமத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் வயலில் வைத்து 7 வயது சிறுமியை இளைஞர் அணில், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அதை தடுக்க முயன்று சத்தம் போட்ட அவரது 5 வயது தங்கையை கூர்மையான இரும்பு ஆயுதத்தால் அனில் பலமாக அடித்தார். இதில் அந்தச் சிறுமி துடிதுடித்து அங்கேயே உயிரிழந்தார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமிகள் இருவரும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் அவர்களை தேடினர்.
இதனிடையே, கிராமத்தை ஒட்டிய வயல்வெளியில் 5 வயது சிறுமியின் உடல் இரவு 11 மணி அளவில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட 100 மீட்டர் தொலைவில் 7 வயது சிறுமி முனகிய நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி மயங்கி கிடந்தார். இந்த சம்பவம் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி அன்று நடைபெற்றது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் அணிலை கைது செய்தனர். இளைஞர் அணில் மீது போக்சோ உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து நீதிபதி ராஜேஷ்குமார் மிஸ்ரா நேற்று தீர்ப்பு அளித்தார்.
அதன்படி அரிதிலும் அரிதான இந்த வழக்கில் சிறுமிகளை திட்டமிட்டு அழைத்துச் சென்று கொலை மற்றும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இளைஞர் அணிலுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் 1.37 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. குற்றவாளியை சாகும்வரை தூக்கில் போட வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பை கேட்டு சிறுமிகளின் தந்தையான கூலித் தொழிலாளி, “தனது மகள்களுக்கு நடந்த கொடூரத்திற்கு நியாயம் கிடைத்ததுள்ளதாக” கண்ணீர் மல்க தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.