

மதுரை மாவட்டம், மாநகர் மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேதுபதி. இவர் பரமக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் கடந்த (அக் 27) ஆம் தேதி காலை வழக்கம் போல் சேதுபதி வேளைக்கு சென்ற நிலையில் விஜயலட்சுமி தனது 7 மாத பெண் குழந்தையை வீட்டிலுள்ள கட்டிலில் துாங்க வைத்துள்ளார். பின்னர் குழந்தை உறங்கி கொண்டிருந்த கட்டிலின் அருகிலயே குளிப்பதற்காக அருகில் உள்ள மின்சார இணைப்பின் உதவியுடன் வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை வழியில் சுட வைத்துவிட்டு மதியம் உணவுக்கு சமையல் அறையில் விஜயலட்சுமி சமைத்துக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது கட்டிலில் படுத்திருந்த குழந்தை திடிரென திரும்பி படுத்தபோது கட்டிலில் இருந்து தவறி அருகில் ஹீட்டர் போடப்பட்டிருந்த சுடுநீர் வாளிக்குள் குப்புற கவிழ்ந்து விழுந்திருக்கிறது. இதனால் குழந்தை சூடு தாங்கமுடியாமல் வேதனையில் அழுத குரல் கேட்டு சமயலறையில் இருந்து பதறியடித்து ஓடி சென்ற விஜயலட்சுமி குழந்தை வாளிக்குள் விழுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக வாளியில் இருந்து குழந்தையை மீட்டுள்ளார்.
இதில் சுடு தண்ணீரில் மூழ்கியதால் குழந்தைக்கு தலை முதல் மார்பு வரை கடுமையான காயம் ஏற்பட்ட நிலையில் குழந்தையை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விஜயலட்சுமி உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த 7 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது. இது குறித்து எஸ்.எஸ்.காலனி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் 7 மாத குழந்தையின் தாயார் குளிப்பதற்காக வைத்திருந்த சுடு தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.