காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பேக்குடன் பேருந்து நிறுத்தத்தில் நின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கருமாங்கழனி கிராமத்தில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஸ்வநாத் - கல்பனா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 8 வயதில் பெஸ்டி என்ற மகள் உள்ளார். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் சிறுமி தனது தாய், தாத்தா மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கல்பனா தனது சொந்த மாநிலமான ஜார்கண்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து சிறுமி தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வீட்டில் இருந்துள்ளார். இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை (அக் 16) சிறுமி வீட்டிலிருந்து தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இருப்பினும் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, சிறுமி மாயமானது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆரனேரி பேருந்து நிறுத்தத்தில் சிறுமி பேக்குடன் நின்றுகொண்டிருந்ததை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பார்த்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சிறுமி அங்கிருந்து எங்கு சென்றார், அவருடன் யாரேனும் சென்றார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி இன்று வரை கிடைக்காத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாயமான சிறுமியை விரைவில் கண்டுபிடிக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.