க்ரைம்

“83 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 9 ஆம் வகுப்பு மாணவன்” - தனியாக இருந்த மூதாட்டிக்கு நடந்த கொடூரம்.. நாகர்கோவிலில் பரபரப்பு!

தற்போது திடீர் மாற்றமாக 9 ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டிருக்கிறார்...

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில் வசித்து வருபவர் 83 வயதுடைய மூதாட்டி முத்துலெட்சுமி. இவரது மகன் மற்றும் மகள்கள் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் முத்துலெட்சுமி மட்டும் அண்ணாமலை நகரில் தனியாக வசித்து வருகிறார். இவர் வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் இருப்பதால் குடும்பத்தினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவருக்கு உதவியாக இருந்து வந்திருக்கின்றனர்.

தினமும் காலை மாலை உறவினர்கள் மூதாட்டிக்கு உணவு கொடுப்பது வழக்கமாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் காலை உறவினர் ஒருவர் மூதாட்டிக்கு உணவு கொடுக்க அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது முத்துலெட்சுமி அலங்கோலமான நிலையில் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த மூதாட்டியை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவ பரிசோதனையில் மூதாட்டி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. தற்போது மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மூதாட்டி பேச முடியாத நிலையில் உள்ளதால் குற்றவாளிகள் குறித்த தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இரண்டு பேர் கொண்ட கும்பல் இந்த வெறி செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் யார் என்பது பற்றி இன்னும் உறுதியாக தெரியவில்லை. தொடர்ந்து இந்த வழக்கில் பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது திடீர் மாற்றமாக 9 ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அன்று அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது சந்தேகத்திற்கு இடமாக அந்த சிறுவன் மட்டும் அப்பகுதியில் பலமுறை சுற்றி திரிந்திருக்கிறார். இதன் அடிப்படையில் போலீசார் அந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுவனை கைது செய்த போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் 83 வயது மூதாட்டியிடம் அத்துமீறிய சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.