கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில் வசித்து வருபவர் 83 வயதுடைய மூதாட்டி முத்துலெட்சுமி. இவரது மகன் மற்றும் மகள்கள் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் முத்துலெட்சுமி மட்டும் அண்ணாமலை நகரில் தனியாக வசித்து வருகிறார். இவர் வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் இருப்பதால் குடும்பத்தினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவருக்கு உதவியாக இருந்து வந்திருக்கின்றனர்.
தினமும் காலை மாலை உறவினர்கள் மூதாட்டிக்கு உணவு கொடுப்பது வழக்கமாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் காலை உறவினர் ஒருவர் மூதாட்டிக்கு உணவு கொடுக்க அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது முத்துலெட்சுமி அலங்கோலமான நிலையில் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த மூதாட்டியை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவ பரிசோதனையில் மூதாட்டி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. தற்போது மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மூதாட்டி பேச முடியாத நிலையில் உள்ளதால் குற்றவாளிகள் குறித்த தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இரண்டு பேர் கொண்ட கும்பல் இந்த வெறி செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் யார் என்பது பற்றி இன்னும் உறுதியாக தெரியவில்லை. தொடர்ந்து இந்த வழக்கில் பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் சம்பவம் நடந்த பகுதியில் ஏதாவது கண்காணிப்பு கேமராக்கள் இருக்கிறதா? என்பது பற்றியும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கஞ்சா கும்பல் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாமா? என்று சந்தேகிக்கப்படுகிறது மேலும் இத்தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதி சேர்ந்த ஊர் பொதுமக்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மூதாட்டியிடம் கொடூர செயலில் ஈடுபட்ட கஞ்சா கும்பலை கைது செய்ய வேண்டும் என்றும் இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.