ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை, ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பல ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காவல்துறை நடத்திய விசாரணை மற்றும் முதல் தகவல் அறிக்கையின் (FIR) படி, 13 வயது சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போன நிலையில், அவரை ஒரு ரிக்ஷா ஓட்டுநர் கடத்தி ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், அந்தச் சிறுமி பல்வேறு ஹோட்டல்களுக்கு அடுத்தடுத்து அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ஐந்து நாட்கள் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பாலியல் வன்கொடுமை ஒரே இடத்தில் நடைபெறவில்லை என்றும், பல ஹோட்டல்களில் மாறி மாறி நடைபெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஒரு ஹோட்டல் உரிமையாளருடன் மட்டுமல்லாமல், பல ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கும் இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவத்தை மூடிமறைக்கவும் சிலர் முயற்சித்ததாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் தகவல் அறிக்கையில், தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமையால் உடலில் கடுமையான வலி ஏற்பட்டபோதெல்லாம், அந்த வலியைத் தாங்கிக்கொள்ள சிறுமியை மது அருந்துமாறு கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் விசாரணையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை பல ஹோட்டல் உரிமையாளர்கள், ஹோட்டல் மேலாளர்கள் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ரிக்ஷா ஓட்டுநரின் பங்கு குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்தக் குற்றத்தில் தொடர்புடைய பிற நபர்களையும் அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீ கங்கானகர் சுற்றுலா நகரமாக இல்லாவிட்டாலும், அங்கு 150-க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஹோட்டல்கள் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அத்தகைய சட்டவிரோத ஹோட்டல்களை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்து வலுத்துள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரன்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபிந்தர் சிங் குன்னார், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கில் விரைவாகவும், வெளிப்படையாகவும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மாநிலம் முழுவதும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது. இந்தச் சம்பவம், உள்ளூர் காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தற்போது இந்த வழக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.