புதுச்சேரி கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ரமணி (42). இந்த தம்பதியருக்கு கல்லூரியில் படிக்கும் மகளும், பள்ளியில் படிக்கும் மகனும் உள்ளனர். வீட்டின் அருகே சொந்தமாக ஹோட்டல் நடத்தி வந்த நிலையில், சம்பவத்தன்று காலை வழக்கம்போல் ஹோட்டல் பணிகளை முடித்த மணி, மார்க்கெட்டுக்குச் சென்று மதியம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டு கதவு பூட்டப்பட்டிருந்ததால் சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்றவர், சமையலறை அருகே உள்ள குறுகிய பகுதியில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த மனைவி ரமணியை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார்.
அவரது கழுத்து, தலை மற்றும் முகத்தில் கூர்மையான ஆயுதத்தால் சரமாரியாக தாக்கப்பட்டிருந்ததுடன், கழுத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த லாஸ்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், ரமணி அணிந்திருந்த 4 சவரன் தாலி, செயின் மற்றும் பீரோவில் இருந்த 2 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்ததால், நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, சம்பவத்திற்கு முன் தனது அக்கா மகன் சேது நாராயணன், அவரது நண்பர் பிரவீன் மற்றும் பிரவீனின் மனைவி ஈஸ்வரிக்கு உணவு கொடுக்க ரமணி சென்றதாக அவரது கணவன் மணி தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சேது நாராயணனை தொடர்பு கொண்டபோது, அவர் நண்பர் பிரவீனுடன் 'ஜனநாயகன்' திரைப்படம் பார்க்கச் சென்றதாகவும், தற்போது மருத்துவமனைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். இதற்கிடையில் வீட்டைச் சுற்றியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ரமணி வீட்டிற்கு பிரவீன் மற்றும் அவரது மனைவி மட்டுமே வந்துச் சென்றது உறுதி செய்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற போலீசார்,
அங்கு ரமணியின் உடலை பார்த்து கதறி அழுத பிரவீனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அவரை தனியாக அழைத்து விசாரித்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், ரமணியை கொலை செய்தது பிரவீன் தான் என்பது அம்பலமானது. கைது செய்யப்பட்ட பிரவீன் அளித்த வாக்குமூலத்தில், சேது நாராயணனுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக அடிக்கடி ரமணி வீட்டிற்கு சென்று வந்ததாகவும், அப்போது அவர் அணிந்திருந்த தங்க நகைகளை பார்த்து அவற்றை திருடி தனது கடனை அடைக்க திட்டமிட்டதாகவும் தெரிவித்தார்.
சம்பவத்தன்று தனது மனைவி ஈஸ்வரியுடன் வீட்டிற்கு சென்று, ரமணி கொடுத்த காலை உணவை சாப்பிட்ட பிறகு, ஈஸ்வரியை மேல்மாடியில் சேது நாராயணனுடன் பேச வைத்து திசைதிருப்பியதாக கூறினார். பின்னர் ரமணியிடம் புடவை பரிசு இருப்பதாக கூறி கண்களை மூட வைத்துவிட்டு, புடவையில் மறைத்து எடுத்துச் சென்ற கல்லால் தலையில் தாக்கியதாகவும், அவர் தப்பிக்க முயன்ற போது அங்கிருந்த அம்மிக்கல்லால் முகத்தில் அடித்து, சத்தம் வெளியே கேட்காமல் இருக்க வாயில் துணி அடைத்து, கத்திரிக்கோலால் சரமாரியாக குத்தி கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
பின்னர் உடலை சமையலறை அருகே இழுத்துச் சென்று போட்டுவிட்டு, வீட்டிலிருந்த ரத்தக்கறைகளை சுத்தம் செய்து, நகைகளை எடுத்துக்கொண்டு மனைவியுடன் வெளியேறிய அவர், சந்தேகம் வராமல் இருக்க சேது நாராயணனை அழைத்து திரைப்படம் பார்க்கச் சென்றதாக தெரிவித்தார். புதுச்சேரியில் டிக்கெட் கிடைக்காததால் கடலூருக்கு சென்றபோது, மணி போன் செய்து மனைவி கொலை செய்யப்பட்ட தகவலை கூறியதாகவும், பின்னர் மருத்துவமனைக்கு வந்து துக்கம் விசாரித்தபோது போலீசாரிடம் சிக்கியதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து பிரவீன்குமார் (24) மற்றும் அவரது மனைவி ஈஸ்வரி (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், 2 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அம்மிக்கல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட தம்பதியின் 8 மாத ஆண் குழந்தை, ஈஸ்வரியின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நண்பர் வீட்டிற்கு அடிக்கடி சென்று பழகிய இளைஞர், நகைக்காக திட்டமிட்டு நண்பரின் சித்தியையே கொடூரமாக கொலை செய்து, பின்னர் சினிமாவுக்கு சென்று எதுவும் தெரியாதது போல் நாடகமாடிய சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.