பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக 35 வயது மதிக்கத்தக்க பெண் பொறியாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண் சுஷ்மா (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் முன்னதாக பிரபல ஐடி நிறுவனமான டெல் (Dell)-ல் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், சுஷ்மாவுக்கும் புனீத் குமார் என்பவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததும், இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருப்பதும் தெரியவந்தது.
கடந்த சில காலமாகவே, இந்த குடும்பத்தில் சிறு சிறு விஷயங்களுக்காக அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. நேற்று சுஷ்மாவுக்கும் அவரது மாமியார் கல்பனாவுக்கும் இடையே சமையல் செய்வது தொடர்பாகப் பெரிய தகராறு வெடித்ததாகக் கூறப்படுகிறது.
சுஷ்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரில், மாமியார் கல்பனா சுஷ்மாவைச் சமையல் செய்ய அனுமதிக்காமல் தடுத்து வந்ததாகவும், பல்வேறு காரணங்களுக்காக அவரைத் தொடர்ந்து மனரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுஷ்மா, தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக சுஷ்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் கணவர் புனீத் குமாரைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மாமியார் கல்பனாவைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.