க்ரைம்

“காதலிக்க மறுத்த பெண் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை” - நள்ளிரவில் காதலன் செய்த வெறிச்செயல்.. காவல் நிலையம் அருகே பரபரப்பு!

ஷர்மிளா வெப்பம் தங்க முடியாமல் தன்னை காப்பாற்றிக்கொள்ள 100 அடி தூரத்திற்கு ஓடி சென்று...

Mahalakshmi Somasundaram

புதுச்சேரி, நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா இவர் தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரை புதுச்சேரி, வாணரப்பேட்டை, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்ற வாலிபர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஜோசப்பிற்க்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தான் ஜோசப் ஷர்மிளாவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் காதலை ஏற்க மறுத்த ஷர்மிளா காதலனுக்கு மறுப்பு தெரிவித்து ஜோசப்பிடம் தன்னை பின் தொடர்ந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக ஷர்மிளாவை தினம்தோறும் அவர் செல்லும் இடங்கள் மற்றும் அவர் வேலை செய்யும் கடைக்கு சென்று வரும் போது பின்தொடர்ந்து சென்று காதலிக்குமாறும், தன்னிடம் பேசுமாறு ஜோசப் அவரை வற்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஷர்மிளா பெரிய கடை காவல் நிலையம் மற்றும் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஜோசப் குறித்து புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், ஷர்மிளா நேற்று வழக்கம் போல் அண்ணா சாலையில் இயங்கி வரும் தனியார் ஜவுளி நிறுவனத்தில் தனது பணியை முடித்துவிட்டு இரவு அண்ணா சிலை அருகே உள்ள உழவர் சந்தை வழியாக வீடு திரும்பிய பொழுது அங்கு ஜோசப் கையில் பெட்ரோல் கேனுடன் உடன் காத்திருந்திருக்கிறார். இதனிடையே அங்கு வந்த ஷர்மிளாவிடம் மீண்டும் தன்னை காதலிக்குமாறும் தன்னிடம் பேசும் மாறும் வற்புறுத்தியுள்ளார். எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஜோசப் அருகில் நின்று பேசி கொண்டிருந்த ஷர்மிளா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதில் தீ மளமளவென பரவி உடல் முழுவதும் எரிந்த நிலையில் ஷர்மிளா வெப்பம் தங்க முடியாமல் தன்னை காப்பாற்றிக்கொள்ள 100 அடி தூரத்திற்கு ஓடி சென்று கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் உடல் முழுவதும் எரிந்து 80℅சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சர்மிளாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஒதியஞ்சாலை போலீசார் ஜோசப்பை கைது செய்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த முதுநிலை கண்காணிப்பாளர் கலைவாணன் தலைமையிலான போலீசார் தடயங்களை பார்வையிட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒதியஞ்சாலை காவல் நிலையம் அருகே பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்