திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் 41 வயதுடைய ஆனந்த் சேகர். இவர் அதே பகுதியில் கூலி தொழில் செய்து வந்தார். இவருக்கும் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு பள்ளி விடுமுறையில் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை மிரட்டி தனி வீட்டிற்குள் அழைத்து சென்று ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்தார்.
மேலும் சிறுமிகளிடம் இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என ஆனந்த் சேகர் கடுமையாக மிரட்டினார். இதனால் பயந்துபோன சிறுமிகள் இது குறித்து அவரது பெற்றோர்களிடம் தெரிவிக்காமல் இருந்திருக்கின்றனர். ஆனால் அந்த சம்பவத்தால் அச்சமடைந்த சிறுமிகளின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்திருக்கிறது. இதை கவனித்த பெற்றோர்கள் அவர்களிடம் அன்பாக விசாரித்திருக்கின்றனர். அப்போது தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமிகள் கண்ணீருடன் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் சேகரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது போன்று ஆனந்த் சேகரால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனரா என தொடர்ந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சுரேஷ்குமார் இன்று (வியாழக்கிழமை) ஆனந்த் சேகர் குற்றத்தை உறுதி செய்து தீர்ப்பு அளித்தார். அவர் தனது தீர்ப்பில், இது சமூகத்தில் நடைபெறும் அரிதிலும் அரிதான வழக்கு என சுட்டிக்காட்டினார். பிஞ்சு குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்த் சேகருக்கு மரண தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் அரசு சார்பில் தலா ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.