வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயது திருமணமான பெண் ஒருவர், போலீஸ் அதிகாரி உடை அணிந்து வேலூர் கோட்டையில் பொதுமக்கள் மத்தியில் தோன்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடுக்கத்தூர் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு திருமணமாய் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் குமரேசன் என்பவருக்கும் இடையில் திருமணத்திற்கு மீறிய உறவு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு நீண்ட நாட்களாக போலீஸ் உடைய அணிந்த காவலர்கள் போல கம்பீரமாக நடக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளார்.
எனவே அவரது கள்ளக்காதலன் குமரேசன் அந்த பெண்ணின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நீண்ட நாள் ஆசையான போலீஸ் உடையை வாங்கி பரிசளிக்க வேண்டும் என முடி செய்திருக்கிறார். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் சென்னைக்கு சென்று போலீஸ் உடைகள் துணிகளை எடுத்து டி.எஸ்.பி. உடையைப் போல தைக்கப்பட்ட சீருடை ஒன்றை ஏற்பாடு செய்து அந்த பெண்ணிடம் பிறந்தநாளுக்கு முன்தினம் பரிசாக வழங்கியுள்ளார். பின்னர் பிறந்தநாளை இருவரும் வேலூர் கோட்டையில் கொண்டாட முடிவு செய்திருக்கின்றனர்.
அதன்படி அந்தப் பெண், காதலனுடன் கேக் வெட்டி கொண்டாட வேலூர் கோட்டையில் பொதுமக்கள் கூடும் இடத்தில் அச்சு அசலாக டி.எஸ்.பி. போல சீருடை அணிந்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார், சந்தேகத்தின் பேரில் அவரை அணுகி “நீங்கள் எந்த காவல் துறையைச் சேர்ந்தவர்?” என விசாரித்துள்ளனர். அதற்கு அவர் அளித்த பதில்கள் முரண்பட்டதாக இருந்ததால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் எந்தவொரு காவல் துறையையும் சேர்ந்தவர் அல்ல என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை உடனடியாக காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலி அதிகாரி போல சீருடை அணிந்து பொதுமக்களை தவறாக வழிநடத்த முயன்றதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருடன் இருந்த லாரி ஓட்டுநர் குமரேசனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.