abuse case 
க்ரைம்

“பொண்ணுங்க ரோட்டுல நடக்கவே முடியாது போலிருக்கே!!” தோளில் கைவைத்து ஆபாச சைகை..!! டீ குடிக்க வந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

தற்போதெல்லாம் நடந்து செல்லும் பெண்களின் பாதுகாப்பே பெரும் கேள்விக்குறியாகியிருக்கிறது...

மாலை முரசு செய்தி குழு

நாட்டின் எந்த ஒரு பகுதியையும் குறிப்பிட்டு இந்த இடம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்ற சொல்லவே முடியாது. இந்த தேசத்தின் மிகப்பெரும் அவலம். அதை சமூகம் இம்மியளவு கூட உணர்ந்ததாக தெரியவில்லை. அதன் நீட்சிதான் தினம்தோறும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள். குடும்பம், வேலை பார்க்கும் இடம், பள்ளி, கல்லூரி, ஏன் சமயங்களில் கோவில்களுக்குள்ளும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. 

அதிலும் தற்போதெல்லாம் நடந்து செல்லும் பெண்களின் பாதுகாப்பே பெரும் கேள்விக்குறியாகியிருக்கிறது. மாதவரம் அருகே தனியார் கம்பெனியில் வேலை முடிந்து  வீட்டுக்கு திரும்பிய பெண்ணிடம் ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாதவரம், பொன்னியம்மன்மேடு பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய பெண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் மாதவரம் ஜி.என்.டி சாலையில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்தி உள்ளார். அப்போது அங்கு வந்த  நபர் ஒருவர் அந்தப் பெண்ணின் தோள்பட்டையில் கையை வைத்து ஆபாசமாக பேசி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரது கையை தட்டி விட்டு, மாதவரம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்து உள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் மாதவரம், பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்த மோசஸ் என்ற அப்பு (வயது 25 ) என்பது தெரியவந்தது .

பின்னர், மாதவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகோபால் அவரை கைது செய்து , அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ‌வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார் . கைது செய்யப்பட்ட மோசஸ் மீது காவல் நிலையத்தில் ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.