

பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே சிறையில் சில நாட்களுக்கு முன்பு மற்றொரு போக்சோ கைதி தற்கொலை செய்துகொண்ட நிலையில், இந்த இரண்டாவது சம்பவம் நிகழ்ந்திருப்பது சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியைச் சேர்ந்தவர் திருமலை குமார் (39). திருமணமான இவருக்கு ஒரு மகள் உள்ளார். சமீபத்தில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் தென்காசி அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு போக்சோ விசாரணை கைதிகளுக்கான பிரத்யேக பிளாக்கில் இருந்த திருமலைக்குமார், கடந்த நான்கு நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று அந்த பிளாக் அருகே உள்ள குளியலறையில், லுங்கியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதைக்கண்ட சக கைதிகள் உடனடியாக சிறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருமாள்புரம் போலீசார், திருமலைக்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்பு கடந்த அக்டோபர் 14 -ஆம் தேதி இதே சிறையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா, காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (28), இவர் மீது இரண்டு போக்சோ வழக்குகள் இருந்தது. இவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரும் சிறை வளாகத்தில் உள்ள கழிவறையில்தான் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தாய் கண்டித்ததாலும் அல்லது ஜாமீன் கிடைக்காத விரக்தியாலும் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் விசாரணை முதற்கட்ட தகவல்கள் வெளியானது. ஆனால், வினோத்குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து பல நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசாருடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்தே அவர்கள் உடலைப் பெற்றுச் சென்றனர். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த போக்சோ கைதிகள் அடுத்தடுத்து பாளையங்கோட்டை சிறையில் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்வது, சிறை நிர்வாகத்தின் பாதுகாப்பு மற்றும் கைதிகளின் மனநலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.