உத்திர பிரதேச மாநிலத்தின் கான்பூர் தேஹாத் பகுதியில், மாமியாரும் அவரது மருமகனும் நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்திர பிரதேஷ் அக்பர்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரால் பகிரப்பட்ட இந்த வீடியோ ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கியது. அதில், ஒரு பெண்ணும் அவரது மருமகனும் திருமண மாலை அணிந்து, திருமணச் சான்றிதழ் போன்ற ஆவணத்தை கையில் வைத்தபடி காணப்படுகின்றனர். மேலும், அவர்கள் இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களது உறவை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வீடியோவில் தெரிவித்துள்ளனர். இருவரும் தங்களது திருமணம் சம்மதத்துடன் நடைபெற்றதாகவும், சமூகத்தின் ஆசீர்வாதம் வேண்டுமெனவும் கூறியுள்ளனர். இதனால் இந்த வீடியோ சமூக வலைதள நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இருப்பினும், இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள தகவல்களின் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. திருமணம் உண்மையில் நடைபெற்றதா, எப்போது நடைபெற்றது, எந்த நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது போன்ற விவரங்கள் தெளிவாக இல்லை. மேலும், திருமணத்தை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.
சம்பவம் குறித்து கான்பூர் தேஹாத் காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர். எனினும், இதுவரை எந்தத் தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ புகார் எதுவும் பெறப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. புகார் அல்லது சட்டரீதியான தகவல் கிடைத்தால் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையில், அப்பகுதி மக்களில் சிலர், அந்தப் பெண்ணுக்கும் அவரது மருமகனுக்கும் இடையே நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறியுள்ளனர். ஆனால் இந்தக் கருத்துகளும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இந்த வீடியோ இணையத்தில் கலவையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. சிலர் இதை இரு பெரியவர்களின் தனிப்பட்ட முடிவாகக் கருதுகின்றனர். மற்றொருபுறம், பலர் இந்த உறவின் சமூக மற்றும் குடும்ப ரீதியான தாக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தின் அலிகார் பகுதியில் இதேபோன்ற ஒரு சம்பவம் பேசுபொருளான நிலையில், தற்போது கான்பூரில் வெளியாகியுள்ள இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. இதன் உண்மை நிலை குறித்து காவல்துறை விசாரணை முடிவுகளுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.