accust and old couple  
க்ரைம்

“உன் பொண்டாட்டி எப்படி உன் கூட குடும்பம் நடத்துவா”.. கள்ளக்குறிச்சி இரட்டை கொலையில் வெளியான பகீர் பின்னணி!

அம்மிக்கல்லை பயன்படுத்தி ராமசாமி மற்றும் அவரது மனைவி பொன்னம்மாளை தலையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்...

Mahalakshmi Somasundaram

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை பகுதியில் உள்ள களக்காடு அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதுடைய ராமசாமி. இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் இருந்த நிலையில். சில வருடங்களுக்கு முன்பு முதல் மனைவி காந்தி உயிரிழந்தார். பின்னர் ராமசாமி தனது இரண்டாவது மனைவியான 67 வயதுடைய பொன்னம்மாள் என்பவருடன் காட்டுக்கொட்டை பகுதியில் தனியாக தங்கி வாழ்ந்து வந்தனர். ராமசாமியின் முதல் மனைவியின் மகன் குப்புசாமிக்கு ஒரு மகள் உள்ள நிலையில் குப்புசாமி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். எனவே பேத்தி மேகலாவை ராமசாமி வளர்த்து, பெருக்கஞ்செடி கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

தொடக்கத்தில் மனைவி மீது பாசமாக இருந்த சதீஷ் நாளடைவில் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார். பின்னர் தொடர்ந்து தினந்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவி மேகலாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், விரக்தியடைந்த மேகலா கடந்த இரண்டு வருடங்களாக சதீஷை பிரிந்து தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்திருக்கிறார். ஆனால் சதீஷ் விடாமல் மேகலாவை போனில் தொடர்புகொண்டும், நேரில் சந்தித்தும் தன்னுடன் வாழ வேண்டும் என வற்புறுத்தி வந்திருக்கிறார்.

இதற்கிடையில் கடந்த ஒரு வருடமாக மேகலா திருப்பூரில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த (ஏப் 24) ஆம் தேதி மனைவியை தேடி அவரது தாத்தா ராமசாமி வீட்டிற்கு சென்ற சதீஷ், மேகலாவை பற்றி தகவல் கேட்டு முதிய தம்பதியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது ராமசாமி “தினமும் குடிச்சிட்டு வந்த உன் பொண்டாட்டி எப்படி உன் கூட குடும்பம் நடத்துவா” என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் அங்கிருந்த அம்மிக்கல்லை பயன்படுத்தி ராமசாமி மற்றும் அவரது மனைவி பொன்னம்மாளை தலையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.

இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரியாலூர் காவல் ஆய்வாளர் பாலமுரளி இருவரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வயது முதிர்ந்த தம்பதியினரை அம்மிக்கல்லை தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய குற்றவாளி சதீஷை கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக சேலம், கெங்கவல்லி, கருமந்துறை, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சல்லடை போட்டு தேடி வந்தனர்.

அப்போது சதீஷ் தர்மபுரி மாவட்டத்தில் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தர்மபுரி சென்ற காவல்துறையினர் சதீஷை மடக்கி பிடித்து கைது செய்தனர் மேலும் மனைவியை தேடிச் சென்ற கணவன் மனைவி இல்லாத விரக்தியில் அவரது தாத்தா பாட்டி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.