திருவாரூர் மாவட்டம், கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கள்ளியூர்பாலு. (எ) பாலகிருஷ்ணன். இவர் முதல்நிலை ஒப்பந்ததாரராகவும் அதிமுக கட்சியில் அம்மா பேரவை ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இவருக்கு அரவிந்த்மோகன், அருள்மோகன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது இருமகன்களுக்கும் தனது சொத்தை எழுதி வைத்துள்ளார்.
இதில் இளையமகனுக்கு அதிக சொத்தும், மூத்த மகனுக்கு குறைவான சொத்தையும் தகப்பனார் பாலகிருஷ்ணன் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மூத்த மகனுக்கும் தந்தை பால கிருஷ்ணனுக்கும் இடையே அடிக்கடி வாய்தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில் இரவு தனது தந்தையிடம் மூத்த மகன் “தம்பியை விட எனக்கு குறைவாக சொத்தை எழுதி வைத்துள்ளாயே” என கடுமையாக கோபித்துகொண்டு தொடர்ந்து அடிக்கடி சண்டையிட்டுவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தந்தைக்கும் மூத்த மகனுக்கும் இடையில் நேற்றிரவு வாய் தகராறு முத்திய நிலையில் கோபத்தின் உச்சிக்கு சென்ற தந்தை பாலு வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது மூத்த மகனை 22 இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
அப்போது துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அரவிந்த் மோகனை சிகிச்சைக்காக அவரது மனைவி ஜெயபிரியா மன்னார்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்திருக்கிறார்.
அரவிந்த்மோகனுக்கு முதல்சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்கு தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனி்ன்றி அரவிந்த்மோகன் உயிரிழந்துள்ளார்.
சொத்து பிரித்த விவகாரத்தில் மகனை தந்தையே 22 இடங்களில் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மகனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய அதிமுக பிரமுகர் பாலகிருஷ்ணன் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
உயிரிழந்த அரவிந்த்மோகனுக்கு ஒரு வயதில் சகானா என்ற பெண் குழந்தை உள்ளது குறிப்பிடதக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்