விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர் காலனியை சேர்ந்தவர் சங்கர் குரு 35 வயதான இவருக்கு சங்கரேஸ்வரி (30) என்ற மனைவியும் 10 மற்றும் 7 வயதில் இரு குழந்தைகள் உள்ளன. சங்கர்குரு கட்டிட வேலையும், அவரின் மனைவி சங்கரேஸ்வரி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். பின்னர் மீண்டும் கடந்த ஒரு ஆண்டாக இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த சங்கர்… மனைவி சங்கரேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சங்கரேஸ்வரி போதையில் நிலைகுலைந்து நின்ற கணவர் சங்கரின் மீது வீட்டில் இருந்த தின்னரை (பெயிண்ட் உடன் கலக்கும் ஒரு வகை எரிபொருள்) ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். உடல் முழுவதும் தீ பற்றிய சங்கர் அங்கும் இங்கும் அலறியடித்து ஓடியதால் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனால் வீட்டில் இருந்த பலவேறு பொருட்கள் சேதமாகியுள்ளது.
கணவரை தீவைத்து எரித்துக் கொன்ற மனைவி சங்கரேஸ்வரி தானே சென்று விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவம் அறிந்து வந்த போலீசார் எரித்து கொலை செய்யப்பட்ட சங்கர் குருவின் உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
மேலும் சரணடைந்த சங்கரேஸ்வரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சில மாதங்களுக்கு முன்னர் வேறொரு பெண்ணுடன் சங்கர் குரு தொடர்பில் இருந்து வந்ததாகவும், இதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருந்து வந்த நிலையில் அடிக்கடி மதுபோதையில் தன்னிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததால் ஆத்திரம் தாங்காமல் தீ வைத்து எரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். விருதுநகரில் குடும்ப தகராறு கணவரை மனைவி எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்