“நீதிமன்றம் முன் வைத்து மனைவியை வெட்டிய கணவன்” - குற்றவாளியுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் விபரீதம்.. கன்னியாகுமரியில் பரபரப்பு!

மனைவியுடன் வாழ நினைத்த வின்சென்ட் ராஜ் விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை...
kanyakumari murder
kanyakumari murder
Published on: 
Updated on: 
2 min read

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே விவாகரத்து வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்த மனைவியை, கணவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த பெண், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே ஈத்தன்விளை பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதுடைய வின்சென்ட் ராஜ். கூலி வேலை செய்து வரும் இவருக்கும், பொன்மனை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஜெர்லின் பிரேமாவுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இதற்கிடையே, வின்சென்ட் ராஜ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறுவன் கொலை தொடர்பான வழக்கும் அவர் மீது இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவரைப் பிரிந்து வாழ விரும்பிய ஜெர்லின் பிரேமா, தக்கலை பத்மநாபபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் மனைவியுடன் வாழ நினைத்த வின்சென்ட் ராஜ் விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

எனவே கணவனை பிரிந்து தாய் வீட்டில் இருந்த ஜெர்லின் பிரேமா விவாகரத்து வழக்கு தொடர்பாக நீதிமன்றத்துக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில், விவாகரத்து வழக்கு தொடர்பாக இன்று (அக் 26) நீதிமன்றத்துக்கு வந்தபோது, அங்கு அவரது கணவர் வின்சென்ட் ராஜும் வந்துள்ளார். அப்போது, மனைவி மீது ஆத்திரத்தில் இருந்ததாகக் கூறப்படும் வின்சென்ட் ராஜ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நீதிமன்றம் முன்புள்ள சாலையில் ஜெர்லின் பிரேமாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ஜெர்லின் பிரேமா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, சம்பவ இடத்தில் பொதுமக்கள் கூடியதால் அங்கிருந்து தப்பியோட முயன்ற வின்சென்ட் ராஜை, வழக்கறிஞர் ஒருவர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. நீதிமன்றம் முன்பே விவாகரத்து வழக்குக்காக வந்த மனைவியை கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com