Shraddha Walkar Murder Case 
க்ரைம்

“காதலியை 35 துண்டுகளாக வெட்டிய காதலன்” - நள்ளிரவில் காட்டுக்குள் வீசப்பட்ட உடல் பாகங்கள்.. டெல்லி ஷ்ரத்தா கொலையில் திடீர் சர்ச்சை!

தனக்கு மிரட்டல் விடுப்பதாகக் கூறப்படும் ஐந்து கைதிகளின் பெயர்களையும் நீதிமன்றத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாக...

Mahalakshmi Somasundaram

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆப்தாப் அமீன் பூனாவாலா, திகார் சிறைக்குள் தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகக் கூறி நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரியுள்ளார். இதையடுத்து, அவரது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2022-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவை சேர்ந்த 27 வயது பெண் ஷ்ரத்தா வால்கர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஷ்ரத்தாவுடன் லிவின் உறவில் இருந்த அவரது காதலரான 28 வயதுடைய ஆப்தாப் அவரை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தார். பின்னர் கொலையை மறைப்பதற்காக உடல் பாகங்களை தினமும் இரவு 2 மணிக்கு தனித்தனியாக எடுத்து சென்று காட்டில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையில் நீண்ட நாட்களாக மகளை தொடர்புகொள்ள முடியாத ஷ்ரத்தாவின் தந்தை மகளை காணவில்லை என போலீசில் புகாரளித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த டெல்லி போலீசார் விசாரணை நடத்தி கடந்த 2022 ஆம் ஆண்டு (நவம்பர் 12) அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் டெல்லி திகார் சிறையிலடைக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது (நவ 02) சிறையில் உள்ள சில கைதிகள் கடந்த 10 நாட்களாகத் தனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக ஆப்தாப் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Shraddha Walkar Murder Case

“ஆயுதங்களைக் கொண்டு தனது முகத்தைக் கிழித்துவிடுவோம் என்றும், உயிரைப் பறித்துவிடுவோம்” என்றும் அவர்கள் மிரட்டுவதாகக் ஆப்தாப் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் சிறைக்குள் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனக்கு மிரட்டல் விடுப்பதாகக் கூறப்படும் ஐந்து கைதிகளின் பெயர்களையும் நீதிமன்றத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிறை எண் 4ஏ-வில் உள்ள தனிக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்தாபின் புகாரை விசாரித்த சாகேத் மாவட்ட நீதிமன்றம், அவரது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால், அவரை மற்ற கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட வேறு வார்டு அல்லது அறைக்கு மாற்றவும் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, மிரட்டல் விடுப்பதாகக் கூறப்படும் கைதிகளிடமிருந்து அவரைப் பாதுகாப்பான இடத்தில் தனியாக வைக்க வேண்டிய அவசியம் இருந்தால், அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேபோல், ஆப்தாபின் பாதுகாப்புக்காக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட சிறைக் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆப்தாபே, தற்போது தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகப் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறிப்பிட்ட ஐந்து கைதிகளும் உண்மையில் மிரட்டல் விடுத்தார்களா, சிறை நிர்வாகம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.