க்ரைம்

முன்னாள் எம்.எல்.ஏ மீதான கடத்தல் வழக்கு; 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Malaimurasu Seithigal TV

அதிமுக முன்னாள்  எம்.எல்.ஏ ராஜவர்மன் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில் மூன்று மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தூர் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ராஜவர்மன் மற்றும் அவரது நண்பர்கள் தங்க முனியசாமி, ஐ.ரவிச்சந்திரன் மற்றும் வி.ரவிச்சந்திரன் ஆகியோர் சேர்ந்து சிவகாசியில் பட்டாசு ஆலை நடத்தி வந்தனர். வி.ரவிச்சந்திரன் மீது சில குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பட்டாசு ஆலை அனுமதி பெறுவதில் சிரமம் ஏற்படும் என்பதால் மற்ற மூன்று நபர்கள் தங்களது பங்குகளை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். 

மூன்று நபர்களுக்கு தலா 70 லட்சம் வீதம் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பங்குத்தொகையை 2019 ம் ஆண்டு செலுத்திவிட்டு விடுதலை பத்திரம் பெற்றுள்ளார். பின்னர் பட்டாசு ஆலை மீது முதலீடு செய்து பெரும் லாபத்தை ஈட்டி உள்ளார். இதற்கிடையே தங்களது பங்குகளை வாங்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 3 நபர்கள், பங்கு தொகையாக மேலும் 2 கோடி ரூபாய் கேட்டுள்ளனர். 

அதனை தர மறுத்த ரவிச்சந்திரனை அடியாட்கள் மூலமாக கடத்தி சிவகாசியில் உள்ள தனியார் லாட்ஜில் வைத்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் ஆட்கள் மிரட்டியதாகவும் இதனையடுத்து பட்டாசு ஆலையை ரவிச்சந்திரன் அவரது மனைவி அங்காள ஈஸ்வரிக்கு 2019 ம் ஆண்டு கிரையம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வீ.ரவிச்சந்திரன் காவல்துறையிடம் புகார் அளித்தும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் ராஜவர்மன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ரவிச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.  இந்த வழக்கில் தொடர்புடைய அப்போதைய சிவகாசி டவுன் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் முத்து மாரியப்பன் தன் மீதான வழக்கு ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்: அந்த மனுவில் தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை எனவும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்து, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். 

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளதால் வழக்கிலிருந்து சார்பு ஆய்வாளரை விடுவிக்க முடியாது எனவும், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.  மேலும் இந்த நிலையில் காவல்துறையின் விசாரணையில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்துள்ள நீதிபதி விசாரணையை நிறைவு செய்து மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.