அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில், 14 வயது சிறுமி என நம்பி சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு, பாலியல் நோக்கத்துடன் நேரில் சந்திக்க முயன்ற முன்னாள் விமானப்படை கேப்டன் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம் என்றும், 5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.4.3 கோடி) வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
நியூ ஜெர்சி மாநிலத்தின் ஈஸ்டாம்ப்டன் பகுதியைச் சேர்ந்த 31 வயதான கேப்ரியல் பெரெஸ், குழந்தைகளை பாலியல் நோக்கத்திற்காக இணையத்தில் கவர்ந்திழுக்க முயன்றது மற்றும் ஆபாசமான புகைப்படங்களை அனுப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக கேம்டன் நகரில் ஐந்து நாட்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடுவர் குழு அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.
அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 14 வயது சிறுமியாக நடித்து செயல்பட்ட ரகசிய சட்ட அமலாக்க அதிகாரியுடன் பெரெஸ் சமூக வலைதளத்தின் மூலம் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த நபர் உண்மையில் சிறுமி அல்ல என்பது பெரெஸுக்குத் தெரியாது. அந்தக் கணக்கின் உரிமையாளர் 14 வயது சிறுமி என்று அறிந்த சில மணி நேரங்களிலேயே, பெரெஸ் பாலியல் உறவில் ஈடுபட விருப்பம் இருப்பதாக தெரிவித்ததுடன், தனது ஆபாசமான புகைப்படம் ஒன்றையும் அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, நேரில் சந்திக்கவும் அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, 2024 ஆகஸ்ட் 29-ஆம் தேதி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சந்திப்பு இடத்திற்கு பெரெஸ் காரில் வந்தார். அப்போது அவரது சட்டைப்பையில் ஆணுறைகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் அங்கு வந்த உடனேயே, மறைமுகமாக கண்காணித்து வந்த சட்ட அமலாக்க அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் விமானப்படை சிறப்புப் புலனாய்வு அலுவலகம் முக்கிய பங்காற்றியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பர்லிங்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் ஈஸ்டாம்ப்டன் காவல் துறையும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேப்ரியல் பெரெஸுக்கு எதிரான இறுதி தண்டனை தொடர்பான விசாரணை வரும் டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வழக்கில் அவருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படலாம் என்றும், 500,000 அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்படலாம் என்றும் நீதித்துறை தெரிவித்துள்ளது. இணையத்தில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க, ரகசிய அதிகாரிகள் மேற்கொள்ளும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை இந்த வழக்கு மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.