“தூக்கில் தொங்கிய படி கணவருக்கு கடைசி வீடியோ” - பியூட்டிசன் அனுபவித்த தொடர் டார்ச்சர்கள்.. AI மூலம் பறிபோன பெண்ணின் உயிர்!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் காட்டி...
கோமல் மிஸ்ரா
கோமல் மிஸ்ராகோமல் மிஸ்ரா
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதான கோமல் மிஸ்ரா. அழகுக்கலை நிபுணராக (Beautician) பணியாற்றி வந்த இவர், திருமணமாகி கணவர் சௌரபுடன் வசித்து வந்தார். திருமணத்திற்கு முன்பு இவரது நண்பர்களாக இருந்த சிலர் இவரது புகைப்படங்களை AI பயன்படுத்தி தவறாக சித்தரித்து கோமலை மிரட்டி வந்திருக்கின்றனர். இதனை வெளியில் சொல்ல முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். அதன் படி சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கோமல் தனது கணவர் சௌரபுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த வீடியோவில், ருபினா கான், சபினா கான், அபிஷேக் சிங் மற்றும் ரிதேஷ் ராய் ஆகிய நான்கு பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு, திருமணத்திற்கு முந்தைய சில தனிப்பட்ட விஷயங்களை காரணமாகக் காட்டி தன்னை தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும், AI தொழில்நுட்பத்தின் மூலம் போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை உருவாக்கி அவற்றை வெளியிடுவதாக அச்சுறுத்தி மனரீதியாக கடுமையாக துன்புறுத்தியதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஏற்பட்ட மன அழுத்தத்தை தாங்க முடியாததால் இந்த முடிவை எடுப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வீடியோவை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கணவர் சௌரப் உடனடியாக வீட்டிற்கு விரைந்து சென்று மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கோமல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, சௌரப் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கணவர் அளித்த புகாரில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் காட்டி, குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் தனது மனைவியை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும், இதன் காரணமாக அவர் நீண்ட நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கோமல் அனுப்பிய கடைசி வீடியோ, செல்போன் மற்றும் பிற டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்றிய போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். AI தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி மிரட்டல் விடுத்ததே இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com