ambulance and body  
க்ரைம்

“ஆட்டோவில் இருந்து வீசப்பட்ட பெண் சடலம்” - சாலை முழுவதும் சிதறி கிடந்த ரத்தம்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

ஆண் நண்பருடனான தொடர்பை கைவிட வேண்டும் என்றும் சின்னா கூறியதாக தெரிகிறது...

Mahalakshmi Somasundaram

சென்னை அம்பத்தூர் இந்திரா நகர் பிரதான சாலை, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 32 வயதுடைய சின்னா. ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும் 28 வயதான வைதேகி என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், வைதேகி இன்ஸ்டாகிரம் மூலம் அறிமுகமான ஆண் ஒருவருடன் தொடர்ந்து பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த சின்னா, மனைவியை கண்டித்துள்ளார். எனவே இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

கடந்த 2-ம் தேதி மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வைதேகி தனது கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் திருமுல்லைவாயிலில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்று வசித்து வந்துள்ளார். இருப்பினும், கடந்த இரண்டு நாட்களாக அம்பத்தூரில் உள்ள கணவரின் வீட்டிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு சின்னா செல்போன் மூலம் வைதேகியை தொடர்புகொண்டு வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

அவரது அழைப்பை ஏற்று வைதேகி அம்பத்தூரில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சின்னா, வெளியே செல்லலாம் எனக்கூறி மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், வைதேகியை ஆட்டோவை ஓட்டுமாறும், தான் பின்னால் அமர்ந்து வருவதாகவும் சின்னா கூறியுள்ளார். இதையடுத்து வைதேகி ஆட்டோவை ஓட்டிச் செல்ல, சின்னா பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். அப்போது, தன்னுடன் மீண்டும் வாழ வேண்டும் என்றும், ஆண் நண்பருடனான தொடர்பை கைவிட வேண்டும் என்றும் சின்னா கூறியதாக தெரிகிறது.

ஆனால், அந்தத் தொடர்பை கைவிட முடியாது என வைதேகி தெரிவித்த நிலையில் இதனால் ஆத்திரமடைந்த சின்னா, அம்பத்தூர் மேனாம்பேடு அருகே ஆட்டோ சென்றபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வைதேகியின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த வைதேகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை சாலையோரம் தள்ளிவிட்டு சின்னா அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச் சென்றதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதூர் போலீசார், வைதேகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சின்னாவை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், அம்பத்தூர் காமராஜபுரம் பகுதியில் இருந்த அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை கொன்றுவிட்டு தந்தை சிறைக்கு செல்லும் நிலையில் இரண்டு குழந்தைகளும் பெற்றோர் இருவரையும் இழந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்