“ஆசையுடன் மகளை பார்க்க வந்த தந்தை” - மதுரையில் பட்டப்பகலில் நடந்த கொலை.. பள்ளி நண்பனுக்காக பழிவாங்கினாரா தினேஷ்?

முன்விரோதத்தில் மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்தனர்...
madurai murder accust arrest
madurai murder accust arrest
Published on
Updated on
2 min read

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள டி.ஆண்டிப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். திருமணமான இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. பெங்களூருவில் வேலை செய்து வந்த மணிகண்டன், தனது பச்சிளம் குழந்தையை பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் மணிகண்டன் அப்பகுதியில் மது அருந்திவிட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மணிகண்டன் பெயரில் ஏற்கனவே கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மதுரை ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சரவண பாண்டியன் என்பவர் மண்வெட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மணிகண்டனும் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற பிணையில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கு தொடர்பாக மணிகண்டனுக்கும் எதிர்தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்தனர்.

Admin

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மணிகண்டன் கொலை வழக்கில் அருண்பிரபு மற்றும் தினேஷ் கண்ணன் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்த இருவரும், வாடிப்பட்டி காவல் நிலையத்தில் நேரில் சரணடைந்தனர்.மேலும், கொலை செய்யப்பட்ட சரவண பாண்டியனின் நண்பரான தினேஷ் கண்ணன், மணிகண்டனை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருவரும் பள்ளி நண்பர்கள் என்பதால், சரவண பாண்டியன் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. புதிதாக பிறந்த குழந்தையைப் பார்க்கும் ஆசையுடன் சொந்த ஊருக்கு வந்த மணிகண்டன், பட்டப்பகலில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com