Ambur 15-Year-Old Girl POCSO Case 
க்ரைம்

“15 வயது சிறுமியுடன் தலைமறைவான வாலிபர்” - திருமணம் செய்து ஒரு வரமாக குடும்பம் நடத்தியதாக புகார்.. போக்சோவில் அதிரடி கைது!

சிறுமியை மீட்டு சுபாஷை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்...

Mahalakshmi Somasundaram

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில், 15 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக கூறப்படும் சுமை தூக்கும் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் விசாரணையில், வானக்காரதோப்பு பகுதியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான 25 வயதுடைய சுபாஷ் என்பவர் சிறுமியிடம் நீண்ட நாட்களாக பழகி வந்ததும் பின்னர் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வந்ததும் தெரியவந்தது. எனவே அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர் சிறுமியை வீட்டை விட்டு அழைத்து சென்றதாக தெரியவந்தது.

மேலும், அவர்கள் இருவரையும் தேடி வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு சுபாஷை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையைத் தொடர்ந்து, சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக கூறப்படும் சுபாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து சுபாஷை ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஆம்பூர் பகுதியில் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக சுமை தூக்கும் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்