திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் மத்தூர் கொல்லை பகுதியில் திருப்பத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் கலீல் என்பவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தில் மாடு, ஆடு, கோழிகளை பண்ணை அமைத்து வளர்த்து வருகிறார். எனவே இந்த பண்ணையில் மனைவியை பிரிந்த திருப்பத்தூரை சேர்ந்த அஷ்கர்பாஷா என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக காவலாளியாக பணியாற்றி வரும் நிலையில் அதே பண்ணையில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்களை அஷ்கர்பாஷா பணிக்கு தனக்கு உதவியாக இருக்க அழைத்து வந்துள்ளார்.
அஷ்கர் பாஷா தினமும் தனது தாய், மற்றும் தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வருவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார், இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரண்டு நாட்களாக அஷ்கர்பாஷா அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளாத நிலையில், மறுநாள் அஷ்கர்பாஷா பணியாற்றும் நிலத்திற்கு வந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடியுள்ளனர், அப்பொழுது அங்கு அஷ்கர் பாஷாவின் செல்போன் மற்றும் இருசக்கர வாகனமும் அவருடன் பணியாற்றி வந்த 2 வடமாநில இளைஞர்களும் காணாமல் போனதை அறிந்த அவரது குடும்பத்தினர் இதுகுறித்து உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் அதனை தொடர்ந்து அஷ்கர் பாஷா பணியாற்றி வந்த அதே நிலத்தில் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார், உடனடியாக இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து உமராபாத் காவல் துறையினர் மற்றும் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர், உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் உடல் முகம் பகுதியில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த அஷ்கர் பாஷாவின் உடலை மீட்டனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார் நடத்திய விசாரணையில் அஷ்கர் பாஷாவை வடமாநில இளைஞர்கள் அடித்து கொலை செய்து, கிணற்றில் வீசிச்சென்றது தெரியவந்துள்ளது.
பின்னர் அஷ்கர் பாஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, அஷ்கர் பாஷாவை அடித்து கொலை செய்து, அவரது உடலை வடமாநில இளைஞர்கள் கிணற்றில் எதற்காக வீசிச்சென்றனர், என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய வடமாநில இளைஞர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் சொந்த மாநிலத்துக்கு தப்பி ஓடிய வடமாநில இளைஞர்களை பிடிக்க எஸ்பி தலைமையான தனிப்படை காவல்துறையினர் உத்தர பிரதேச மாநிலத்திற்கு விரைந்து சென்று கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனில் குமார் (25) மற்றும் அங்கீத் (17) ஆகிய இருவரை கைது செய்து உமராபாத் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அஷ்கர் பாஷா தொடர்ந்து மது போதையில் வடமாநில இளைஞர்களை தரக்குறைவாக பேசி வந்ததாகவும், சம்பளம் சரிவர கொடுப்பதில்லை எனவும், சம்பவத்தன்று அணில் குமார் சமைத்து பரிமாறிய உணவை அஷ்கர்பாஷா காலால் எட்டி உதைத்துள்ளார்.
இவ்வாறு அவமானப்படுத்தியதால் ஆத்திரமடைந்து வடமாநில இளைஞர்கள் இருவரும் அஷ்கர் பாஷாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விவசாய கிணற்றில் வீசிவிட்டு அஸ்கர் பாஷாவின் இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு ஓசூர் வரை சென்றதாகவும் அங்கிருந்து பெங்களூர் சென்று ரயில் மூலம் சொந்த மாநிலத்திற்கு தப்பி ஓடியதாக விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.