Attipattu Pudhunagar Attack 
க்ரைம்

“சாவு ஊர்வலத்தில் சண்டை.. 2 நாளில் பழிதீர்த்த கும்பல்” - ரயில்வே காவலரால் காப்பாற்றப்பட்ட உயிர்!

பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் விசில் அடித்தபடி சம்பவ இடத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில், முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து நடைபெற்ற அவரது இறுதி ஊர்வலத்தில் சூரிய வேந்தன் மற்றும் விக்னேஷ் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு சூரிய வேந்தன் தனியாக இருந்தபோது, விக்னேஷ் தனது நண்பர்களுடன் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சூரிய வேந்தனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் கை, கால், தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. சூரிய வேந்தன் வலி தாங்க முடியாமல் அலறியபோது, அருகிலுள்ள ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் விசில் அடித்தபடி சம்பவ இடத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

காவலர் வருவதை பார்த்ததும் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடியதாக தெரிகிறது. இதையடுத்து படுகாயமடைந்த நிலையில் கிடந்த சூரிய வேந்தனை போலீசார் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சூரிய வேந்தன் (21) மீது ஏற்கெனவே கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து சூரிய வேந்தனை தாக்கியதாக கூறப்படும் விக்னேஷ் (19) மற்றும் 3 சிறார்களை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட விக்னேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி அவரை புழல் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 3 சிறார்களும் இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறு இரண்டு நாட்களில் கொலை முயற்சியாக மாறிய சம்பவம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.