திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த சிற்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதுடைய மாரிமுத்து. ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர், மின்வாரிய ஊழியரை கத்தியை காட்டி மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், வெங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக கடந்த (ஆக 25) ஆம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் பாகல்மேடு அருகே சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவரை பின்தொடர்ந்து காரில் வந்த 5-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல், மாரிமுத்துவின் இருசக்கர வாகனத்தை வழிமறித்துள்ளனர்.
தொடர்ந்து, காரால் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மாரிமுத்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து, காரில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்த அந்த கும்பல், மாரிமுத்துவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. மாரிமுத்துவை வெட்டிவிட்டு அந்த கும்பல் காரில் தப்பிச் செல்ல முயன்றுள்ளது. அப்போது, கார் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வீட்டின் மதில் சுவரில் மோதி நின்றதாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு, காரில் இருந்தவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது காருக்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததை பார்த்த பொதுமக்கள், கும்பலைச் சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெங்கல் போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடியதாக கூறப்படும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கீழானூர் பகுதியைச் சேர்ந்த தீபா என்ற பெண்ணுடன் மாரிமுத்துவுக்கு திருமணத்திற்கு மீறிய தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தீபாவின் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் அவரது கணவர் தீபாவை அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதன்பிறகும் மாரிமுத்துவுடன் தீபா தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு தீபா தற்கொலை செய்து கொண்டதாகவும், தனது சகோதரியின் தற்கொலைக்கு மாரிமுத்து தான் காரணம் என அவரது சகோதரர் தீனா கருதியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாரிமுத்துவுக்கும் தீனாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக மாரிமுத்து சென்றதை அறிந்த தீனா, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை பின்தொடர்ந்து சென்று வழிமறித்து தாக்கி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் இதில் தொடர்புடைய மற்றவர்களின் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையத்தில் கையெழுத்திடச் சென்ற ஓட்டுநர், வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெங்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.