நெல்லை டவுன் பாறையடி ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய வேல்முருகன் என்ற மாரியப்பன் அன்றாட வாழ்வாதாரத்திற்காக வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். ஜூன் 28 தச்சநல்லூர் - டவுன் சாலையில் உள்ள குருநாதன் கோவில் திருப்புமுனை அருகே அவர் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரது ஆட்டோவை நிறுத்தி விசாரித்துள்ளனர். அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக கூறி, மேலும் ஆட்டோவை இயக்க அனுமதிக்காமல் காவல்துறை தரப்பில் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த ஆட்டோ ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பது குறித்து உயிரிழந்த ஓட்டுநரின் மனைவி கூறுகையில், சவாரி ஏதுமின்றி காலியாக வந்த தனது கணவரின் வாகனத்தை மட்டும் காவலர்கள் திட்டமிட்டு மறித்ததாக குறிப்பிட்டள்ளார். 'மற்ற வாகனங்களை அனுமதித்துவிட்டு என் வண்டியை மட்டும் ஏன் நிறுத்துகிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பியதால் கோபமடைந்த காவலர்கள், அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி, சாதிய ரீதியாகவும் மிகக் கேவலமாக பேசி வன்முறையை ஏற்படுத்தியுள்ளார். மேலும், அவரது கைபேசியைப் பறித்து தரையில் போட்டு உடைத்ததுடன், வாகனத்தின் சாவியையும் பிடுங்கிக்கொண்டு சிறையில் அடைத்துவிடுவதாக அச்சுறுத்தியுள்ளனர்.
காவல்துறையினரின் இந்தத் தாக்குதலாலும், பொது வெளியில் இழைக்கப்பட்ட சாதிய அவமானத்தாலும் எல்லையற்ற மன உளைச்சலுக்கு ஆளான ஓட்டுநர், 'என்னை விட்டுவிடுங்கள், இல்லையென்றால் தீக்குளித்து இறந்துவிடுவேன்' என்று கதறியுள்ளார். அதற்கு அங்கிருந்த காவலர்கள் சிறிதும் இரக்கமின்றி, 'சும்மா இருக்காமல் கொளுத்திக் கொண்டு சாவு' என்று தற்கொலைக்குத் தூண்டும் வகையில் பேசியுள்ளனர். இதனால் கடும் விரக்தியடைந்த அவர், அங்கிருந்த ஒரு பெண் காவலர் உட்பட 6 காவலர்கள் முன்னிலையில் தன் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டுள்ளார். அவர் உடலெங்கும் தீப்பற்றி எரிந்த கொடூரமான தருணத்தில், அங்கிருந்த காவலர்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர, உடனடியாகத் தீயை அணைக்க முற்படவில்லை என்று மனைவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சுமார் 79 சதவீதத்திற்கும் மேலாக உடல் கருகிய நிலையில், அவர் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மறைந்த ஓட்டுநருக்கு 7 மற்றும் 8 வயதில் இரு குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத்தின் ஒற்றை வாழ்வாதாரமாகத் திகழ்ந்த அவரது இழப்பு அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநரின் மரணத்திற்குக் காரணமான மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக அங்கிருந்த 6 காவலர்கள் மீது தச்சநல்லூர் காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தங்களை வழிபாட்டுத் தலத்திற்கு அழைத்துச் செல்லவிருந்த தனது கணவர், வீட்டிலிருந்தே பெட்ரோல் எடுத்து வந்ததாகக் கூறி போலீசார் ஜோடிக்கப் பார்க்கும் பொய் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட 6 காவலர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தங்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்றும் உயிரிழந்தவரின் மனைவி கண்ணீரோடு கோரியுள்ளார். இந்த துயர சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.