

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய தாளமுத்து. இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வரும் நிலையில், தாளமுத்து தனது மனைவி மற்றும் 32 வயதுடைய மகன் அருள்ராஜுடன் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. டிரைவராக பணியாற்றி வந்த அருள்ராஜ், கடந்த சில ஆண்டுகளாக மதுபோதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து பெற்றோருடன் தகராறு செய்வதையும், அக்கம் பக்கத்தினரிடம் அடிக்கடி வாக்குவாதம் மற்றும் மோதல்களில் ஈடுபடுவதையும் வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், மதுபோதையில் தனது தாய், தந்தையை தாக்கி துன்புறுத்தியதுடன், விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு வந்த தனது சகோதரியின் குழந்தையையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் நீண்ட நாட்களாக அச்சத்தில் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. அருள்ராஜின் மதுப் பழக்கத்தை கைவிட வைக்க குடும்பத்தினர் பலமுறை முயற்சி செய்ததாகவும், கடந்த 2021-ஆம் ஆண்டு கயத்தாறு அருகே செயல்பட்டு வந்த போதை மறுவாழ்வு மையத்தில் மூன்று மாதங்கள் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அங்கிருந்து திரும்பிய பின்னரும் அருள்ராஜ் மீண்டும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, தொடர்ந்து குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த அருள்ராஜ், தனது தந்தை தாளமுத்து மற்றும் தாயுடன் கடுமையாக தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் நீடித்த நிலையில், ஆத்திரமடைந்த தாளமுத்து, மகனை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு கதவை பூட்டிக் கொண்டு உள்ளே சென்று படுத்து தூங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை வீட்டின் முன்பு மதுபோதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அருள்ராஜ் மீது ஆத்திரத்தில் இருந்த தந்தை தாளமுத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீ பரவியா நிலையில் சம்பவ இடத்திலேயே அருள்ராஜ் உயிரிழந்தார்.
சம்பவத்திற்குப் பிறகு தாளமுத்து நேரடியாக சிப்காட் காவல் நிலையத்திற்கு சென்று மகனை கொன்றுவிட்டதாக கூறி சரணடைந்துள்ளார். தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, எரிந்த நிலையில் இருந்த அருள்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தாளமுத்துவை கைது செய்த போலீசார், இந்த கொலை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீண்ட காலமாக மகனின் மதுப்பழக்கம் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட தொடர் தகராறுகளே இந்த கொலைக்கு காரணமா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடுபோதைக்கு அடிமையான மகனை, ஆத்திரத்தில் தந்தை தீ வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.