திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே 50 நாட்களுக்கும் மேலாக காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது மனைவி 3 பிள்ளைகளுடன் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பட்டாபிராம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆவடி அருகே பட்டாபிராம் அனனம்மேடு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஜெய் பிரகாஷ் என்பவருடன் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் பிரகாஷுக்கு கடந்த ஓராண்டாக அதே பகுதியில் வசித்து வரும் அனிதா என்ற இளம் பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வந்த பிரகாஷ் கடந்த (ஆக 30) சவாரிக்காக வீட்டை விட்டு சென்ற அவர் அதன்பிறகு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. கணவர் காணாமல் போனதைத் தொடர்ந்து, திவ்யா உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்துள்ளார். ஆனால், பிரகாஷ் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, பட்டாபிராம் காவல் நிலையத்தில் தனது கணவர் காணாமல் போனது குறித்து புகார் அளித்ததாகவும், ஆனால் 50 நாட்களுக்கும் மேலாகியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும், தங்களது விசாரணையில் அவர் தொடர்பில் இருந்த பெண் அனிதாவுடன் சென்றிருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதாக தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். கணவர் இல்லாததால் குடும்பத்தின் அன்றாட செலவுகள், உணவு, இருப்பிடம் மற்றும் 3 பிள்ளைகளின் கல்விச் செலவுகளை சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாக திவ்யா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தனது 3 பிள்ளைகளுடன் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற திவ்யா, காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டுத் தர வேண்டும் என புகார் அளித்துள்ளார். மேலும், தனது புகார் மீது உரிய விசாரணை நடத்தி, கணவரை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரகத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்