மரணம் எப்போது யாருக்கு, எதனால் வரும் என்று சொல்லவே முடியாது. அது ஒரு அழையா விருந்தாளி போல் தான், அது வரும் சமயத்தில் அதனை தடுத்து நிறுத்தும் ஆற்றல் ஒருவருக்கும் இல்லை. சோகத்தில் பெரும் சோகம் ‘புத்திர சோகம்’ என்பர் தாங்கள் வாழும் காலத்திலேயே தங்களின் குழந்தைகளை பறிகொடுப்பதுபோலொரு துயரம் வேறொன்றுமில்லை.
அதிலும் எதிர்பாராமல் நொடிப்பொழுதில் தங்கள் குழந்தைகளை இழக்க நேரிட்டால் அந்த பெற்றோர்களின் வாழ்வே சூன்யமாகிவிடும். அப்படி ஒரு சம்பவம்தான், செங்கல்பட்டு பகுதியில் நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தேவத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் வினோத்குமார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் தனது வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பதற்காக ‘தின்னர்’ என்று சொல்லக்கூடிய ஒரு வகை திரவத்தை வாங்கிய வைத்துள்ளார்.
அந்த பெயிண்ட் அடிக்கும் திரவத்தை வினோத் குமாரின் ஒன்றரை வயது கொண்ட அவரது மகள் பிறைமதி விளையாடிக் கொண்டே தவறுதலாக குடித்துவிட்டார். பின்பு வாந்தி மற்றும் மயக்கம் அடைந்த நிலையில் உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிறைமதியின் உடல்நிலை மேலும் மோசமான நிலையில், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே சுமார் ஒரு வாரத்திற்கு மேலாக அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் குழந்தை திடீரென சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை வளர்ப்பு மிக மிக முக்கியமாக கையாளப்பட வேண்டிய ஒன்று. சில மணி நேர அஜாக்கிரதையான செயல்கூட வாழ்வில் பெருந்துன்பத்தை விளைவிக்கும் என்பதற்கு பிறைமதியின் சாவு ஒரு சான்று. குழந்தைகளுக்கு அருகாமையில் எவ்வித தீங்கு விளைவிக்கும் பொருட்களையும் வைக்காமல் பார்த்துக்கொள்வதில் பெற்றோர்கள் தீவிர கவனமாக இருக்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.