க்ரைம்

சொந்த அப்பாவை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை! 18 வயது மகனின் வெறிச்செயல்.. நெல்லையில் பரபரப்பு!

பள்ளிக்கு செல்லாமல் படிப்பை நிறுத்தி ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் இவருக்கு மது குடிக்கும் பழக்கமும்

Muthu Lakshmi

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி என்ற மகேஷ் (43). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கல்யாணி மற்றும் இவர்களுக்கு மகாராஜன் (18) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மகாராஜன் 9-ம் வகுப்பு படித்து அதில் தேர்ச்சி பெறவில்லை என்பதால், அதன் பின்னர் பள்ளிக்கு செல்லாமல் படிப்பை நிறுத்தி ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. 

இந்நிலையில் தந்தை-மகன் 2 பேருமே மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு மாயாண்டி மதுபோதையில் வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படும் நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் தந்தைக்கும்-மகனுக்கும் இடையே வீட்டில் வைத்து மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மது போதையில் இருந்த மகன் மகாராஜன் ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் தந்தை என்றும் பாராமல் தலையில் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து மாயாண்டி உயிரிழந்துள்ளார்.  

பின்னர் மகாராஜன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாயாண்டி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பிச்சென்ற மகன் மகாராஜனை போலீசார் தேடி வருகின்றனர். பெற்ற தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாநகரில் கஞ்சா, மது போதையில் அடிக்கடி பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி சந்திப்பு, குறுக்குத்துறை, டவுன் பகுதிகளில் கஞ்சா பொட்டலங்கள் தாராளமாக கிடைக்கிறது என்றும், அதனை இளம் வயதினர் வாங்கி புகைத்து போதையில் தகராறில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது எனவும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகிறார்கள். எனவே போலீசார் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்வதோடு குண்டர் சட்டத்தில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.