

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குடும்பத் தகராறில் கணவனை தோசைக் கல்லால் அடித்து கொலை செய்த மனைவி போலீஸ் நிலையத்தில் சரண்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடமதுரை அருகே உள்ள உடையாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுகராஜ் (வயது 49). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக முருகேஸ்வரிக்கும், சுகராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று வீட்டில் இருந்த போது சுகராஜூக்கும் முருகேஸ்வரிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் அது கைகலப்பாக மாறியள்ளது. அப்போது முருகேஸ்வரி வீட்டிலிருந்த தோசை கல்லால் கொண்டு சுகராஜை தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சுகராஜ் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதன்பின்னர் முருகேஸ்வரி தானே வடமதுரை காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சுகராஜின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்ய திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தோசை கல்லை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் முருகேஸ்வரியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறு காரணமாக மனைவியே கணவனை தோசை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.