Bengaluru Seven Family Members Murder Case 
க்ரைம்

“ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரக் கொலை" - வெவ்வேறு இடங்களில் வீசப்பட்ட உடல்கள்.. பெங்களூருவை உலுக்கிய கேப் டிரைவர் சங்கர்!

உறவினர்கள் சமாதானம் செய்து கணவன் மனைவி இருவரையும் ஒன்றாக வாழ வைத்ததாக சொல்லப்படுகிறது.

Mahalakshmi Somasundaram

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கேப் டிரைவர் ஒருவர் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களைப் பெங்களூருவின் பல்வேறு பகுதிகள் மற்றும் சிக்கபள்ளாப்பூர் உள்ளிட்ட இடங்களில் வீசியதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக இந்து சேகர் என்பவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவின் ஸ்ரீராம்புரா ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதுடைய இந்து சங்கர் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுனிதா என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான தொடக்கத்தில் இருந்தே கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த சில வருடங்களாக வாக்குவாதம் அதிகரித்து வந்த நிலையில் உறவினர்கள் சமாதானம் செய்து கணவன் மனைவி இருவரையும் ஒன்றாக வாழ வைத்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே மனைவி சுனிதா குறித்து அவரது தாய் ரூபாவதியிடம் தெரிவித்த போது அவரும் தனது மக்களுக்கே சாதகமாக பேசி இந்துசங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவ்வப்போது சுனிதா அவரது தாய் வீட்டிற்கு சென்று வந்த நிலையில், மனைவி தன்னுடன் வாழாமல் இருக்க அவரது குடும்பத்தினர் தான் காரணம் என நினைத்து ஆத்திரமடைந்துள்ளார். எனவே இந்து சங்கர் மனைவி, அவரது மாமியார், மைத்துனர்கள் மற்றும் மைத்துனர்கள் மனைவிகள் ஆகியோரை கொல்ல திட்டமிட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

அதன்படி கடந்த அக்டோபர் மாதம் வீட்டில் இருந்த அவரது மனைவி சுனிதாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து பின்னர் உடலை வீட்டில் இருந்து கார் மூலம் அப்புறப்படுத்தி காட்டுப்பகுதியில் வீசியுள்ளார். அதன்பிறகு விருந்து வைப்பதாகக் கூறி தனது மைத்துனர்களான சிவக்குமார் மற்றும் சங்கர் ஆகியோரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அவர்கள் வந்த பிறகு இருவரையும் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.தொடர்ந்து, அவர்களது மனைவிகள் திவ்யா, நளினி, தனது மாமியார் ரூபவதி மற்றும் சிவக்குமாரின் 7 வயது மகன் புனீத் ஆகியோரையும் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

Bengaluru Seven Family Members Murder Case

இருப்பினும், ஒவ்வொருவரும் எந்தச் சூழலில் கொலை செய்யப்பட்டனர், கொலைகள் நடைபெற்ற வரிசை என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கொலையில் செய்தது போல அடுத்தடுத்த கொலைகளுக்குப் பிறகு, உயிரிழந்தவர்களின் உடல்களைத் தனது காரில் எடுத்துச் சென்று பெங்களூருவின் பல்வேறு பகுதிகள் மற்றும் சிக்கபள்ளாப்பூர் உள்ளிட்ட இடங்களில் வீசியதாக இந்து சேகர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், கொலை நடந்த வீட்டில் இருந்த ரத்தக் கறைகள் உள்ளிட்ட தடயங்களை அழிப்பதற்காக ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். காணாமல் போன நளினியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் இந்து சேகரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் அளித்த பதில்களில் முரண்பாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, 7 பேரைக் கொலை செய்தது தொடர்பான தகவல்கள் வெளியானதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் இதுவரை சிவகுமாரின் மகனான 7 வயது சிறுவன் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்களின் உடல்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மலை அடிவாரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உடல்கள் வீசப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இடங்கள், இந்து சேகரின் காரில் மேற்கொண்ட பயண விவரங்கள், சம்பவம் நடைபெற்ற வீடு உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கும் தடயங்கள் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கொலைகளுக்கான உண்மையான பின்னணி, ஒவ்வொருவரும் கொல்லப்பட்ட விதம், உடல்களை அப்புறப்படுத்திய விதம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பெங்களூரு மத்திய துணைக் காவல் ஆணையர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.