கர்நாடக மாநிலம், பெங்களூரு ராஜகோபால்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜேஸ்வரி நகர் பேங்க் லேஅவுட் பகுதியில் வசித்து வந்த தம்பதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவைச் சேர்ந்த 32 வயதுடைய சுமந்த் ஜெயின், மற்றும் அவரது மனைவி ஹுப்பள்ளியைச் சேர்ந்த 29 வயதுடைய பத்மாவதி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுமந்த் ஜெயின் நந்தினி லேஅவுட்டில் சிவில் இன்ஜினியராகவும், அவரது மனைவி பத்மாவதி வைட்ஃபீல்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகவும் பணியாற்றி வந்தனர்.
இருவரும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு பெங்களூருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த (ஆக 14) வெள்ளிக்கிழமை மதியம் அவர்களது வீட்டில் இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சுமந்த் ஜெயின் தனது மனைவி பத்மாவதியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், இருவரது மரணத்திற்கான உறுதியான காரணம் இதுவரை தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் சுமந்த் மற்றும் பத்மாவதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பத்மாவதி தனது தாய்க்கு வாட்ஸ்அப்பில், “அம்மா, நான் சாகப் போகிறேன். திருமணத்தின் போது எனக்கு வழங்கப்பட்ட தங்க நகைகளை தயவுசெய்து எடுத்துக்கொள்ளுங்கள்” என மெசேஜ் அனுப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், சுமந்த் ஜெயினும் தனது தரப்பில் வாட்ஸ்அப் மூலம் ஒரு தகவலை அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில், தனது பிஎஃப் பணம் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக்கொள்ளுமாறும், வீட்டை தன்னுடையது என மனைவி கூறி தகராறு செய்து வருவதாகவும், தான் சாகப்போவதாகவும் தெரிவித்திருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த வாட்ஸ்அப் தகவல்கள் இருவரது மரணத்திற்கு முன்பாக நடந்த சண்டை சம்பவங்கள் குறித்து முக்கிய ஆதாரமாக இருக்கிறது என போலீசார் கருதுகின்றனர்.
இருவரது செல்போன்கள் மற்றும் பிற ஆதாரங்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து இருவரது பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். காதலித்து திருமணம் செய்த பொறியாளர் தம்பதி ஒரே வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்