Instagram blackmail case 
க்ரைம்

“உன் அந்த போட்டோவை லீக் பண்ணிடுவேன்” - ஹோட்டலில் தனிமையில் இருந்த பெண்.. 2 வருடங்கள் சித்திரவதை செய்த வாலிபர்!

பிளாக்கை எடுக்கச்சொல்லி கூறியதாகவும், இல்லையென்றால் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்களைப் இணையதளங்களில் பதிவிட்டுவிடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

Vinvizhi Leninton

இன்ஸ்டாகிராமில் சந்தித்த நபர் ஒருவர், தனது அனுமதியின்றி ஆபாச புகைப்படங்கள் எடுத்ததாகவும் அதைக் கொண்டு அவரை மிரட்டி பணம் பறித்ததாகவும், மனரீதியாகத் துன்புறுத்தியதாகவும் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், 2024-ம் ஆண்டில் அவர் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் படித்துவந்துள்ளார். ​​இன்ஸ்டாகிராம் செயலி மூலம் அன்ஃபால் என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் மூலமாக அன்ஃபால், அப்பெண்ணின் கைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்டு, அவரைப் பலமுறை சந்தித்து வந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை மணிப்பாலுக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாக அந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அந்த ஹோட்டலில், அந்த நபர் அப்பெண்ணின் அனுமதியின்றி ஆபாசமான புகைப்படங்களை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர், அந்த நபர் ஆபாச புகைப்படங்களைப் பயன்படுத்தி, பணம் கொடுக்காவிட்டால் அவற்றை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி வந்துள்ளார். அவர் ஃபோன்பே (PhonePe) மூலம் அந்த பெண்ணிடமிருந்து பணத்தைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், அன்ஃபால் மீண்டும் அப்பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, அவர் எடுத்த புகைப்படங்களைக் காட்டி மீண்டும் மிரட்டியுள்ளார். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று அந்த பெண் கூறியபோது, ​​அந்த நபர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் 10 முதல் 12 கிராம் எடை கொண்ட தங்கச் சங்கிலியை வலுக்கட்டாயமாகப் பறித்துவிட்டு, இந்தச் சம்பவத்தை குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்றும் எச்சரித்ததாகக் அந்த பெண் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்தப் பெண் அவரது கைபேசி எண்ணை பிளாக் செய்துள்ளார். ஆனால் அந்த நபர் வேறு வேறு எண்களைப் பயன்படுத்தி அந்த பெண்ணை தொடர்புகொண்டு, பிளாக்கை எடுக்கச்சொல்லி கூறியதாகவும், இல்லையென்றால் அந்த பெண்ணின் ஆபாச புகைப்படங்களைப் இணையதளங்களில் பதிவிட்டுவிடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

தொடர்ச்சியான வாட்ஸ்அப் வீடியோகால் அழைப்புகளின் மூலம் அடிக்கடி தொந்தரவும் செய்து வந்துள்ளார். அதாவது, அன்ஃபால் தன்னை மணிக்கணக்கில் வீடியோ அழைப்பில் இருக்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும், தனக்குத் தானே காயங்களை ஏற்படுத்திக்கொள்ளுமாறு கொடுமை செய்ததாகவும் அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அந்த பெண் இணங்கவில்லை என்றால், அப்பெண் இருக்கும் இடத்திற்கு வந்து அவரைக் கொலை செய்துவிடுவதாக அன்ஃபால் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அவர் ஏற்படுத்திய பயம் மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக, அந்தப் பெண் ஒரு பிளேடைக் கொண்டு தனது மார்பில் இருந்த 'அன்ஃபால்' என்ற பெயரை கீறிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 4 அன்று, அப்பெண்ணின் பெற்றோர் அந்த பெண்ணை பெங்களூருக்கு அழைத்து வந்து விசாரித்தபோதுதான் இந்த கொடூரங்கள் குறித்து தெரிந்துகொண்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அவருடைய தந்தை செப்டம்பர் 8 அன்று காவல்துறையை அணுகி அன்ஃபாலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 (இ) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைகள் நடைபெறுவதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்