பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலியை திருமணம் செய்ய மறுத்த இளைஞர், அவர் பைக்கைப் பிடித்துக் கொண்டிருந்த நிலையிலும் வாகனத்தை நிறுத்தாமல் சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் கடும் கண்டனங்களை கிளப்பியுள்ளது. நவாடா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அரசு அளவையராகப் பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை அவர் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் காதலை முறித்துக்கொண்டு தொடர்ந்து அந்த பெண்ணை சந்திக்க மறுப்பு தெரிவித்து வந்ததாக சொல்லப்படுகிறது
இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண், காதலனை நேரில் சந்தித்து “ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ணிக்கோ” என தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு சம்மதிக்காத இளைஞர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் செல்ல முயன்றுள்ளார். காதலன் தப்பிச் செல்வதைத் தடுக்க முயன்ற இளம்பெண், பைக்கின் பின்பகுதியைப் பிடித்துக் கொண்டுள்ளார். இருப்பினும், வாகனத்தை நிறுத்தாமல் வேகத்தை அதிகரித்த இளைஞர், பைக்குடன் அவரை சாலையில் இழுத்துச் சென்றுள்ளார்.
தொடர்ந்து பிடியை விடாமல் போராடிய இளம்பெண், சுமார் 100 மீட்டர் தூரம் தரையில் உராய்ந்தபடி இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில் இளைஞரும், இளம்பெண்ணும் கீழே விழுந்து காயமடைந்தனர். இந்த காட்சியை நேரில் பார்த்த பொதுமக்கள் கடும் ஆத்திரமடைந்து, இளைஞரை மடக்கிப் பிடித்து தாக்கினர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இடம் அவரை ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெண்ணை இரக்கமின்றி பைக்கில் இழுத்துச் செல்லும் காட்சிகள் இணையவாசிகளிடையே கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவருக்கும் இடையேயான உறவு, ஏற்பட்ட தகராறு மற்றும் சம்பவத்திற்கான பின்னணி குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் நவாடா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.