காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் கணவரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பழையசீவரம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதுடைய சோமசுந்தரம், ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சோனியா என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்திருக்கின்றனர். எனவே, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் பழையசீவரத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். தற்போது சோனியா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வழக்கம் போல சம்பவத்தன்று மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சோமசுந்தரம் மனைவி சோனியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றிருக்கிறார். பின்னர் நீண்ட நேரமாகியும் சோனியா வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது சோனியா தரையில் சடலமாக கிடந்துள்ளார். எனவே உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோனியாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சோமசுந்தரத்தை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில், ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் கொடூரமாக உயிரிழந்த இந்த சம்பவம் பழையசீவரம் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் தொடர்ந்து நடைபெறும் விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.