க்ரைம்

பக்கத்துக்கு வீட்டுக்காரரால் சீரழிக்கப்பட்ட பெண்.. அவரையே குற்றவாளியாக்கிய பஞ்சாயத்து! எச்சிலை நக்கச் சொல்லி நூதன தண்டனை

அதன் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான பின்னரே இந்தக் கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

Muthu Lakshmi

பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமை புகார் அளித்த ஒரு பெண், தண்டனையாக ஒரு பஞ்சாயத்தின் முன்னிலையில் எச்சிலை நக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். இந்தச் சம்பவத்தின் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஜூன் மாதம் நடந்த போதிலும், தற்போது அதன் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான பின்னரே இந்தக் கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆகஸ்ட் 1 அன்று போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின்படி, ஜூன் 2ஆம் தேதி இரவு, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் அப்பெண்ணின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, மிரட்டி அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் ஜன்னல் வழியாக தப்பிச் செல்ல முயன்றபோது, கிராமவாசிகள் அவரை மடக்கிப் பிடித்து தாக்கியுள்ளனர். மேலும், கிராம பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர். காவல்துறைக்குத் தகவல் தெரிவிப்பதற்குப் பதிலாக, அவர்கள் இருவரையும் பொதுவெளியில் அவமானப்படுத்தியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அந்தப் பெண், தன்னை அந்த ஆண் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தும், அதை நம்பாத கிராம பஞ்சாயத்து அந்தப் பெண்ணையும் குற்றம் சாட்டியுள்ளது. அதனால், இருவரையும் தண்டிக்கும் நோக்கில் அங்கிருந்தவர்கள் நடந்துகொண்டதாகத் தெரிகிறது.

அந்தக் காணொளியில், கிராமவாசிகள் அந்தப் பெண்ணைச் சூழ்ந்திருக்க, காதுகளைப் பொத்தியபடி நிற்கும் அந்தப் பெண், குனிந்து தரையில் இருந்த எச்சிலை நக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார். பின்னர், அந்தக் காணொளியில், பாலியல் வன்கொடுமைக் குற்றவாளி என்று நம்பப்படும் நபரும் கூட்டத்தின் முன்னிலையில் தன் காதுகளைப் பொத்திக்கொள்ளவும், மன்னிப்புக் கேட்கவும், எச்சிலை நக்கவும் வைக்கப்படுகிறார்.

ஜூலை 31 அன்று சமூக ஊடகங்களில் அந்தக் காணொளி முதன்முதலில் வைரலானதை அடுத்து இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், கிராம மக்கள் வேறுவிதமான சம்பவ விளக்கத்தை அளித்துள்ளனர். அதன்படி, அந்தப் பெண்ணும் குற்றம் சாட்டப்பட்டவரும் உறவில் இருந்ததாகவும், ஆட்சேபனைக்குரிய சூழ்நிலையில் சிக்கிக்கொண்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, "குற்றச்சம்பவங்கள் நிரூபிக்கப்படாத நிலையில், பெண்ணின் புகாரை விசாரிக்க வேண்டியது காவல்துறையே தவிர கிராம மக்கள் அல்ல" என்றும், "இந்தச் செயல் முற்றிலும் மனிதாபிமானமற்றது" என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.