கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் காட்டுப்பகுதியில் ஆடைகள் இன்றி மர்மமான முறையில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம் தொடர்பான வழக்கில், 12 நாட்கள் நீடித்த தீவிர விசாரணைக்குப் பிறகு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை அவரது கணவரே கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் ஆடைகள் ஏதுமின்றி கிடப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மர்மமான முறையில் இளம்பெண் உயிரிழந்திருந்ததால், மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். குற்றவாளிகளை கண்டறிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் உயிரிழந்த பெண் யார், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், கோவைக்கு எதற்காக வந்திருந்தார் என்பது போன்ற எந்த தகவலும் ஆரம்பத்தில் கிடைக்கவில்லை. இதனால் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை கண்டறிவதே போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக மாறியது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட தகவல் சேகரிப்பின் அடிப்படையில், சுமார் 12 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த பெண் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதுடைய வர்ஷா என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், வர்ஷா தனது கணவர் ஜெகன் பிரதானுடன் கோவைக்கு வந்து தங்கி, பல்வேறு கட்டுமானப் பணிகளில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. ஆனால் வர்ஷாவின் மரணத்திற்குப் பிறகு அவரது கணவர் ஜெகன் பிரதான் திடீரென தலைமறைவாகி இருந்தது போலீசாரின் சந்தேகத்தை அதிகரித்தது.
இதையடுத்து ஜெகனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விசாரணையில் அவர் சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு தப்பிச் சென்று பதுங்கியிருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று ஜெகன் பிரதானை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவி வர்ஷா அடிக்கடி வேறு ஆண்களுடன் செல்போனில் பேசி வந்ததாக சந்தேகமடைந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த ஜெகன், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, ஆரம்பத்தில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு கைது செய்யப்பட்ட ஜெகன் பிரதானிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் மதுக்கரை போலீசார், கொலை நடந்த சூழ்நிலை, சடலம் காட்டுப்பகுதிக்கு எவ்வாறு கொண்டு செல்லப்பட்டது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அடையாளம் தெரியாத பெண்ணின் சடலமாக தொடங்கிய இந்த வழக்கில், 12 நாட்கள் கழித்து கணவரே கொலையாளி என்பது தெரியவந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.